Pongal Gift Amount: அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
தமிழ்நாட்டைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் பொங்கல் பரிசை அரசு வழங்கிய நிலையில், புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்துள்ள முதல்வர் ரங்கசாமி, அதில் ஒரு ட்விஸ்ட்டும் வைத்துள்ளார். அது என்னவென்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு
தமிழ்நாட்டில், 2026-ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவில், இந்தமுறை ரொக்கப் பரிசாக 3,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில், 2.27 கோடி ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அதில் 2.22 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான டோக்கன் விநியோகம் வீடு வீடாக சென்று நடைபெற்று, தற்போது பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியிலும் ரூ.3000 பொங்கல் பரிசு அறிவிப்பு
இதேபோல், புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 4,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்காக 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஆளுநரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நிதிச்சுமை காரணமாக, முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, இன்று பிற்பகல் ஆளுநரை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதையடுத்து, புதுச்சேரியில், 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. ஆனால், இந்த ரொக்கப் பரிசு, பொங்கல் முடிந்த பிறகு தான், ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.






















