Noel Tata : TATA-ன் கிரீடம் யாருக்கு? ரத்தன் டாடாவின் மனசாட்சி! யார் இந்த நோயல் டாடா?
132 ஆண்டுகள் பழமையான டாடா சாம்ராஜ்யத்தை கட்டிக்காத்து இந்திய தொழிலதிபர்களில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த ரத்தன் டாடாவின் நாற்காலியில் அடுத்து அமரப் போவது யார் என்ற எதிர்பாப்பு எகிறியிருக்கிறது. ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடாவே, டாடா குழுமத்தின் தலைவராகப் போகும் அடுத்த வாரிசு என்று சொல்கின்றனர். 11 ஆண்டுகளில் ஒட்டுமொத்த தொழிலதிபர்களும் வியக்கும் வகையில் ஒரு சாதனை செய்து அசத்தியவர் தான் 67 வயதான நோயல் டாட்டா.
ரத்தன் டாடாவின் தந்தை நாவல் டாடா, சிமோன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களது மகன் தான் இந்த நோயல் டாடா. இவர் தற்போது டாடா குழுமத்தின் பல நிறுவனங்களின் இயக்குநராக இருக்கிறார். டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக இருக்கக் கூடியது டாட்டா சன்ஸ். இதில் ரோடாப்ஜி டாடா ட்ரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா ட்ரஸ்ட் இரண்டும் டாடா சன்ஸ்-ல் சுமார் 52% பங்குகளை வைத்திருக்கின்றன. இந்த 2 டாடா ட்ரஸ்ட்களின் ட்ரஸ்ட்டியாக இருப்பவர் நோயல் டாட்டா தான்.
டாட்டா குழுமத்தின் முக்கிய பொறுப்பான வர்த்தகம் மற்றும் விநியோகம் தொடர்பான பிரிவான டாட்டா இன்டர்னேஷனல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்த போது தொழிலதிபர்களை வியக்க வைக்கும் ஒரு சாதனையை செய்தார். 2010 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாயை 500 மில்லியன் டாலரில் இருந்து 3 பில்லியன் டாலராக உயர்த்தினார். 11 ஆண்டுகளிலேயே மிகப்பெரிய லாபத்தை காட்டி அசத்தினார் நோயல் டாடா.
Trent மற்றும் tata’s retail arm-ல் நோயல் டாட்டா கொண்டுவந்த சில மாற்றங்கள் சமூக, பொருளாதார ரீதியான வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதானதாக இருக்கும் வகையில் ஃபேஷனை மாற்றியது. அதில் இந்திய அளவில் ரத்தன் டாடாவை பாராட்டும் வகையில் அமைந்த ஒரு முன்னெடுப்பு தான் Zudio. ப்ராண்ட்டான ஆடைகள் என்று வந்தாலே ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் மார்க்கெட்டில் இருந்த நேரத்தில், எளிய மக்களும் வாங்கும் வகையில் 1000க்கு குறைவான விலையில் zudio என்ற பிராண்டை டாடா ட்ரெண்ட் கொண்டுவந்தது தான். டாடா ட்ரெண்ட்- ல் நோயல் டாடாவின் தலைமையில் தான் இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்தது. 1998ல் ஒற்றை கடையுடன் தொடங்கிய டாடாவின் துணிக்கடைகள் இன்றைய நாளில் 700 கடைகளாக விஸ்வரூபம் எடுத்துள்ளன. பிசினஸ் என்று வரும் போது லாபத்தை தாண்டி சமூக பார்வையுடன் டாடா அக்கறையுடன் செயல்படுவதை காட்டியதற்கு இதுமாதிரியான சம்பவங்கள் சான்று.
40 ஆண்டுகளாகவே டாடா குழுமத்தில் அனுபவம் இருந்தாலும், 2000களின் தொடக்கத்தில் இருந்து முழு வீச்சில் இறங்கிய நோயல் டாடா, அடுத்த சில ஆண்டுகளிலேயே அதிரடி மாற்றங்களை கொண்டுவந்து லாபம் காட்டினார். ரத்தன் டாடாவின் இடத்தை முழுமையாக நிரப்புவது கடினம் என்றாலும், அவரது இடத்தில் அமரும் திறமை உள்ள நபர் நோயல் டாட்டா என்று சொல்கின்றனர். நோயல் டாட்டாவின் அனுபவமும், தொழிலபதிர்களுடன் அவருக்கு இருக்கும் நெருக்கமும், டாடா குழுமத்தை வருங்காலங்களில் மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் நம்புகின்றனர்.
நோயல் டாடாவிற்கு மாயா, நெவில், லியா என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த 3 பேரும் கடந்த மே மாதத்தில் டாடாவின் 5 தொண்டு நிறுவனங்களின் இயக்குநராக நியமிக்கப்பட்டனர். டாடாவில் நடந்த மிக முக்கிய மாற்றமான இது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதற்கு காரணம் டாடா குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் பெரிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டது. அதனால் நோயல் டாட்டாவின் வாரிசுகள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ரத்தன் டாடாவின் பதவிக்கும், அதிகாரத்திற்கும் அடுத்த வாரிசாக சரியான ஆளாக நோயல் டாட்டவே இருப்பார் என்ற குரலும் எழுந்து வருகிறது. ரத்தன் டாடாவுக்கு அடுத்து டாடா குழுமத்தின் பவர் யாருக்கு போகப் போகிறது? டாடா குழுமம் எந்த அளவுக்கு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.