DMK CONGRESS TVK: தவெகவிற்கு பல்டியா.? டெல்லியில் திடீர் ட்விஸ்ட்- திமுகவிற்கு கெடு விதிக்க தயாராகும் ராகுல்.?
Congress Election Alliance: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க ராகுல் காந்தி தலைமையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த கூட்டத்தில் கூட்டணி ஆட்சி, தவெகவுடன் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படவுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கு நெருங்க அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இடையில் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் தனி தனி அணியாக போட்டியிட்டு தேர்தலில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து கூட்டணி அமைத்து எதிர்கொண்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தொடர் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியோடு தேர்தலை சந்திக்க திமுக திட்டமிட்டது. இதற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சி சார்பிலும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது.
கூட்டணி ஆட்சி- காங்கிரஸ் கோரிக்கை
இந்த குழுவினர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி தர வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனையடுத்து திமுக தலைமை எந்தவித பதிலும் சொல்லவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழுவையும் அமைக்கவில்லை. காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்தும் பேசவில்லை. இதனைடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் சமூகவலைதளங்களில் கூட்டணி ஆட்சி கட்டாயம் வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார்கள். திமுக தலைமையை விமர்சித்தும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் கட்சியான தவெகவோடு கூட்டணி அமைக்கவும் ரகசியமாக ஒரு சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இளைய தலைமுறையை ஈர்க்க காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மூலம் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான தகவலை கொண்டு சேர்த்துள்ளது. இந்த நிலையில் தான் இன்று மாலை டெல்லியில் தமிழகத்தில் சட்டமன்ற கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. அப்போது தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி தொடர்பாகவும், ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக ஆலோசிக்கவுள்ளது.
டெல்லியில் ராகுல் ஆலோசனை
எனவே இந்த கூட்டத்தில் திமுக கூடுதல் தொகுதி மற்றும் ஆட்சியில் பங்கு தரவில்லையென்றால் தவெகவிற்கு செல்வது தொடர்பாக முடிவெடுக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன்பாக திமுக தலைமைக்கு குறிப்பிட்ட காலம் கெடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் தவெகவிற்கு பல்டி அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன்.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) January 17, 2026
எனக்காக அல்ல..🙂
என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதாற்காக ..
அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்..
இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல ..
நம் உரிமையை…
கூட்டணி ஆட்சி- மாணிக்கம் தாகூர்
இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல. என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்கார்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதாற்காக , அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும், இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல, நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல.. மதவெறி கும்மல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோழ் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என பதிவிட்டுள்ளார்.





















