நம்பர் 1 பணக்காரர் யார்? தடுமாறும் எலான் மஸ்க்! குடைச்சல் கொடுக்கும் ட்ரம்ப்
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கையே பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்திற்கு சென்றார் லேரி எல்லிசன். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே தனது இடத்தை விட்டுக் கொடுக்காமல் மீண்டும் நம்பர் 1 ஆனார் எலாஸ் மஸ்க். இருந்தாலும் எலான் மஸ்க்கிற்கு அதிபர் ட்ரம்ப் நிறைய குடைச்சல் கொடுப்பதால் எப்போது வேண்டுமானாலும் நிலைமை மாறலாம் என சொல்கின்றனர்.
2021ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார் ஸ்பேக் எக்ஸ், டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க். அதன்பிறகு அவரை அந்த இடத்தில் இருந்து இறக்குவது கோடீஸ்வரர்களுகு சவாலாக இருந்தது. எலாஸ் மஸ்க்கை தொடர்ந்து அமேசானின் ஜெப் பெசோஸ் மற்றும் எல்விஎம்எச்-ன் பெர்னார்டு அர்னால்ட் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். கடந்த ஆண்டு மீண்டும் முதல் இடத்திற்கு வந்த எலான் மஸ்க் 300 நாட்களாக உலகின் நம்பர் 1 பணக்காரராக வலம் வந்தார்.
இந்தநிலையில் 300 நாட்களுக்கு பிறகு அமெரிக்காவின் ஆரக்கிள் என்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். 81 வயதான லேரி எலிசனின் சொத்து மதிப்பு 394 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் எலான் மஸ்க்கின் 384 பில்லியன் டாலராக இருந்ததை ப்ளூம்பெர்க் உறுதி செய்தது. AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஆரக்கிள் நிறுவன பங்குகள் கடந்த சில மாதங்களாகவே உயர்வை சந்தித்து வருகின்றன. Chatgpt மக்கள் மத்தியில் அறிமுகமானதில் இருந்தே இந்த நிறுவன பங்குகள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே லேரி எல்லிசனை பின்னுக்கு தள்ளி தன்னுடைய நம்பர் 1 இடத்திற்கு முன்னேறினார் எலான் மஸ்க். எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 384 பில்லியன் டாலராகவும் லேரி எல்லிசனின் சொத்து மதிப்பு 383 பில்லியன் டாலராகவும் மாறியது. இருவருக்கும் இடையே 1 பில்லியன் டாலர் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் நிலைமை மாறலாம் என சொல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே எலாஸ் மஸ்க் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன. அமெரிக்காவில் அமெரிக்கா கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கியதும் டெஸ்லா பங்குகள் சரிய ஆரம்பித்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் நெருக்கமாக இருந்த எலான் மஸ்க், அவரிடம் இருந்து விலகியதில் இருந்தே பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் வழங்கப்பட்டு வந்த மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வரவிருப்பதாக சொல்லி பகீர் கிளப்பினார் ட்ரம்ப். இதனால் பயந்து போன முதலீட்டாளர்கள் டெஸ்லா பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு வெளியேற ஆரம்பித்தனர்.
அதேபோல் மும்பை, டெல்லியில் திறக்கப்பட்ட டெஸ்லா ஷோ ரூம்களும் அடிவாங்க ஆரம்பித்துள்ளன. இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த 50% வரியால் டெஸ்லா கார்களுக்கான முன்பதிவு மந்தமாக நடந்து வருகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 2,500க்கும் அதிகமான கார்களுக்கு டார்கெட் வைக்கப்பட்ட நேரத்தில் வெறும் 600 கார்கள் மட்டுமே முன்பதிவாகியுள்ளன. அதனால் எலான் மஸ்க் நெருக்கடியான சூழலிலேயே இருக்கிறார். அதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றே சொல்கின்றனர்.





















