அமைச்சர் திடீர் ராஜினாமா!3 MLA-க்கள் பதவி விலகல்..புதுச்சேரி அரசியலில் TWIST
புதுச்சேரியில் பாஜவைச் சேர்ந்த அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்கள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ்- பாஜ இணைந்து சந்தித்தது. இதில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது.
முதல்வராக ரங்கசாமியும், என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும், துணை சபாநாயகர் பதவியும் கொடுக்கப்பட்டது. அதேபோல் பாஜவில் 2 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜக கட்சியை சேர்ந்த ராமலிங்கம், அசோக் பாபு மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் நியமன எம்எல்ஏக்களாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தற்போது பாஜக நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகிய 3 பேரும் சபாநாயகர் செல்வத்தை சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை 3 பேரும் சட்டசபை செயலர் தயாளனிடம், சபாநாயகர் செல்வம் முன்னிலையில் வழங்கினர்.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஆகியோர் அமைச்சர் அல்லது வாரியத் தலைவர் பதவி வழங்குமாறு வலியுறுத்தி வந்தனர். வேறு சிலர் நியமன எம்எல்ஏ பதவிகளை கேட்டு வந்தனர். பதவி வழங்காததால் கட்சிக்குள் அதிருப்தி நிலவியது. இந்நிலையில், டெல்லியில் இருந்து வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம், மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர்கள் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து பேசினர். பின்னர், சாய் ஜெ.சரவணன்குமார் முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தொடர்ந்து, ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்தார். பின்னர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமைச்சர் ஜெ.சரவணன்குமார் அளித்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அவர் ராஜினாமா செய்தது, பாஜக உட்கட்சி விவகாரம்” என்றார். ராஜினாமா குறித்து சாய் ஜெ.சரவணன்குமாரிடம் கேட்டதற்கு, “பிரதமரின் உத்தரவுப்படி எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்றார்.
இதற்கிடையில், நியமன எம்எல்ஏக்களான ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோரும் பேரவைத் தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அவர்களுக்குப் பதிலாக காரைக்கால் தொழிலதிபர் ராஜசேகர், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், மூத்த நிர்வாகி முதலியார்பேட்டை செல்வம் ஆகியோர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்படலாம் என்றும், பாஜக சார்பில் புதிய அமைச்சராக எம்எல்ஏ ஜான்குமார் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது.





















