கொலம்பசையே கொண்டாட வைக்கும் ரம்மியமான தென்பெரம்பூர் அணைக்கட்டு - எப்படி போகணும்... இதோ ரூட்டு
Thanjavur Thenperambur Dam: கொலம்பஸ், கொலம்பஸ் விட்டாச்சு லீவு... கொண்டாட கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு அப்படின்னு பாடல்லாம் வேண்டாம். சும்மா ஜில்லுன்னு காற்று தாலாட்ட, மரங்கள் இலைகளை கொட்ட பட்ஜெட்டுக்குள்ள ஒரு சின்ன டூர்
தஞ்சாவூர்: கொலம்பஸ், கொலம்பஸ் விட்டாச்சு லீவு... கொண்டாட கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு அப்படின்னு பாடல்லாம் வேண்டாம். சும்மா ஜில்லுன்னு காற்று தாலாட்ட, மரங்கள் இலைகளை கொட்ட பட்ஜெட்டுக்குள்ள ஒரு சின்ன டூர் போவோமா... எங்கேன்னு கேட்கறீங்களா? இதோ இங்கதான்.
ஒரு சுகமான, ரம்மியமாக இடத்திற்கு போய் மனசை ரிலாக்ஸ் செய்வோம்
ஒரு சுகமான, ரம்மியமாக இடத்திற்கு போய் மனசை ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அதுவும் நம்ம பட்ஜெட்டுக்குள்ள கையை கடிக்காம செலவும் அதிகம் இல்லாம அப்படின்னு யோசிக்கிற நம்மள மாதிரியான நடுத்தர குடும்பங்களுக்கு டூர் அடிக்க ஒரு இடம்ன்னா உங்களுக்கு ஏற்ற இடம்னா அது தஞ்சை மாவட்டம் தென்பெரம்பூரில் அமைந்துள்ள அணைக்கட்டுதாங்க. கவலைகள் தூரமாக வீசிட்டு, மனசு, உடம்பு புத்துணர்ச்சி பெற்று புது போனில் புல் பேட்டரி ஏற்றியதுபோல பீலிங்கோட மனசு நிறைஞ்சு உங்க குடும்பத்தினர் உங்களை பாராட்டுவாங்க இங்க வந்தா என்றால் மிகையில்லை. அத்தகைய சுற்றுலாத் தலமாக உள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்பெரம்பூர் அணைக்கட்டு (Thenperambur Dam). சிலர் அறிந்தாலும் பலராலும் இன்னும் அறியப்படாமல் உள்ள அருமையான சுற்றுலாத்தலம்தான் இது.
கொள்ளைக் கொள்ளும் அழகுடன் வெண்ணாறு வந்து சேர்ந்து நிற்கும் இடமே தென்பெரம்பூர்
புத்தம் புதிய மனிதனாக புத்துணர்ச்சி அளித்து அனுப்பி வைத்து விடும். ஸ்கூல் பீஸூ,கரண்ட் பில்லு, செல்போன் பில்லு, வீட்டு வாடகை, தண்ணீர் வரி அப்படின்னு மாசமாசம் போடற பட்ஜெட்டுல சின்னதாக ஒரு அமௌண்ட் ஒதுக்கி உங்க குடும்பத்தோடு வந்து மனசு குளிர்ந்து போங்க. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே அமைந்துள்ளது தென்பெரம்பூர் அணைக்கட்டு. கல்லணைத் தலைப்பிலிருந்து வெளியேறுகிறது காவிரியின் கிளை ஆறான வெண்ணாறு. சுழன்றும், தவழ்ந்தும், வேகமாகவும் இருகரைகளையும் தொட்டு தாலாட்டி, முட்டி மோதி கண்களை கொள்ளைக் கொள்ளும் அழகுடன் வெண்ணாறு வந்து சேர்ந்து நிற்கும் இடமே தென்பெரம்பூர்.
கடல் போல் காட்சியளிக்கும் தென்பெரம்பூர் அணைக்கட்டு கட்டப்பட்டு நூற்றாண்டுகளை கடந்தும் ஷட்டர்ஸ் வழியாக வெளியேறும் தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து இன்றும் பார்ப்பவர்களை வியப்படைய செய்கிறது. இங்கிருந்து வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என மூன்று ஆறுகளாகப் பிரிந்து செல்கிறது. மேலும் ஜம்புக் காவேரி வாய்க்கால், ராஜேந்திரன் வாய்க்கால் என்றும் பிரிந்து செல்கிறது.
இருபுறமும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது
இந்த அணைக்கட்டுக்கு அருகிலேயே இருபுறமும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜல்லிகட்டில் காளையை அடக்கும் வீரரின் சிலை, சுற்றுச் சுவரில் தேசியத்தலைவர்கள் படங்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடர்த்தியாக வளர்ந்து நிழல் தரும் மரங்களுக்கு நடுவே இந்தப் பூங்கா இருக்கிறதுனால செம கூல்.... ஊட்டிக்குள் புகுந்த உணர்வை ஏற்படுத்தும். மரங்களின் அடிப்பகுதியைச் சுற்றி வட்ட வடிவில் உட்கார்வதற்காக சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
தாலாட்டும் காற்றே போதும் புத்துணர்வு அளிக்கும்
ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள மண் திட்டில் விண்ணை நோக்கி வளர்ந்துள்ள இந்த மரங்கள் காற்றின் வேகத்தில் குளுகுளுவென்று இயற்கை ஏசி காற்றை வழங்குகின்றன. இந்த தாலாட்டும் காற்றே போதும் புத்துணர்வை கொடுக்க. வெண்ணாற்றின் ஓரத்தில் சிறிய அளவில் ஜம்பு காவிரி என்ற பாசன வாய்க்கால் தன் பயணத்தை தொடங்குகிறது. குறைந்த அளவில் தண்ணீர் செல்லக் கூடிய இதில் அச்சமின்றி எவ்வித ஆபத்தும் இல்லாமல் குளித்து மகிழலாம். மெயின் ஆறுகளில் ஆழமும், முதலை ஆபத்தும் இருப்பதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு மேல் இருசக்கர வாகனம் மட்டுமே செல்லமுடியும். அதுவும் எதிரில் வாகனம் வரமுடியாது. வார இறுதிநாட்களில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்தவர்கள் மனமார சாப்பாட்டுடன் வந்து குடும்பத்தோடு குதூகலப்பட்டு செல்கின்றனர்.
எப்படி போகணும்... இதோ ரூட்டு
திருச்சியிலிருந்து கல்லணை - திருக்காட்டுப்பள்ளி வழியாக பூதலூர் வந்து தென்பெரம்பூரை அடையலாம். தஞ்சாவூரிலிருந்து கள்ளப்பெரம்பூர் செல்லும் வழியில் தென்பெரம்பூருக்கு வரலாம். அணைக்கட்டுக்கு நேரடியாக பஸ் வசதி கிடையாது, பைக், காரில் வருபவர்களுக்கு ஏற்ற இடம். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருப்பதால் கேண்டீனோ, ஓட்டல் வசதிகளே இல்லை. அதனால சாப்பாடு, குடி தண்ணீர் கொண்டு வந்திடணும். மனதைப் புத்துணர்ச்சியாக்க ரம்மியமான சுற்றுலாத்தலங்களுக்கு செல்பவர்கள் ஒருமுறை பட்ஜெட் டூருக்கும், ஒன் டே டூருக்கும் ஏற்ற இடமான தென்பெரம்பூர் அணைக்கட்டை ஒருமுறை வந்து பார்த்தால் ஆஹா அற்புதமான இடம் என்று துள்ளிக்குதிப்பார்கள்.