மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Sivagangai: சுறா முள்ளில் வாள், தமிழரின் வளரி, கொம்பு போன்ற ஈட்டி - அரண்மனை சிறுவயல் ஆச்சரியம்
"மருது பாண்டியர்கள் அங்கு போர் பயிற்சிகள் எடுத்துக் கொண்ட இடமாக இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்” - தமிழைப் பாதுகாத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அரண்மனை சிறுவயல் பார்க்க வேண்டிய இடம்.
காளையார் கோவில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று சிறுவயலுக்கு போகிற வழி என்று நான்கெல்லையில் ஒன்றைக் குறிக்கிறது, இவ்வூர் சிறுவயல் என்றே பழங்காலத்தில் வழங்கி வந்திருக்கிறது பின்னாளில் அரண்மனை அமைக்கப்பட்ட பிறகு அரண்மனை சிறுவயல் என்று வழங்கும் வழக்கு ஏற்பட்டிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள அரண்மனை சிறுவயல் கிராமத்தில் உள்ள பழமையான ஜமீன் அரண்மனைக்கு சென்றோம். சிதலமடைந்த நிலையில் காட்சியளித்த கோட்டைச் சுவர் வாயிலாக ஜமீன் அறைக்குள் நுழைந்தோம். 10க்கும் மேற்பட்ட வேல் கம்பு, 2 வளரி, சுறா தண்டில் செய்த ஆயுதம், குறுவாள், பல்வேறு வடிவங்களில் கர்லாக்கட்டை, கல்லில் செய்த உடற்பயிற்சி ஆயுதம் உள்ளிட்டவைகளை காண முடிந்தது. மருது பாண்டியர்கள் அங்கு போர் பயிற்சிகள் எடுத்துக் கொண்ட இடமாக இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நம்மிடம் சிவகங்கை மாவட்டத்தின் தொல்லியல் பெருமையை தேடி ஆராய்ந்துவரும்
சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவனர் புலவர் கா.காளிராசா விளக்கினார்..,”
அரண்மனை
இங்குள்ள அரண்மனை சிவகங்கையை ஆண்ட சசிவர்ணர் வழியினரால் கட்டப்பட்டுள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட மருது சகோதரர்கள் படையுடன் இவ்வூரில் தங்கி ஆங்கிலேயருடன் போர் புரிந்துள்ளனர். இவ்வரண்மனையில் தங்கி மருது சகோதரர்கள் போர்ப்பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுவதுண்டு. ஏழரை ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்த இக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் ஊருக்கு வெளியே வெளியேறும் வகையில் சுரங்கம் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. இக்கோட்டை கிழக்கு நோக்கிய வாயிலை உடையது.
இங்கு மருது சகோதரர்களுக்கும் சின்ன மருதுவின் மூத்த மகன் சிவத்தம்பிக்கும் அரண்மனை இருந்ததை ஆய்வாளர்களின் வழி அறிய முடிகிறது.
மும்முடி சோழிசுவரம்.
இங்குள்ள சிவன் கோயில் மாமன்னன் இராஜராஜன் பெயரில் அமைக்கப்பெற்றிருக்கலாம் என கல்வெட்டாய்வாளர்களால் கருதப்படுகிறது. இன்று இறைவன் மும்முடி நாதர், என்றும் இறைவி கருணா கடாட்சி என்றும் வழங்கப்படுகிறார்கள், கோயிலில் பாண்டியர்களில் மாறவர்மன் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், குலசேகரன், மதுரை நாயக்க மன்னர்கள், குறுநில மன்னன் மாளவ சக்கரவர்த்தி போன்றோர்களது கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. கல்வெட்டுகளில் கேரள சிங்க வளநாட்டு கீழைத் திருத்தியூர் முட்டத்து 'சிறுவயல்' என்று இவ்வூர் குறிக்கப் பெறுகிறது மேலும் கல்வெட்டுகளில் நிலக்கொடை மற்றும் ஏனைய கொடைச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. மேலும் முருகன் சந்நிதி புதிதாக உருவாக்கி சிற்பம் செய்து வைத்த செய்தி, அவரது தேவியரான தெய்வானை வள்ளி ஆகியோரது உருவங்கள் செய்து வைக்கப்பட்ட செய்தி இடம் பெற்றுள்ளது. இவ்விறைவர்களை வணங்க வந்த சேர, சோழ,பாண்டிய மன்னர்கள் ஊரில் ஊரணிகள் வெட்டியதாக கூறப்படுகிறது, அவ்வாறாக பாண்டிய மன்னன் வெட்டிய மான் கொண்டான் என்ற ஊரணி இன்றும் இவ் வூரின் பயன்பாட்டில் உள்ளது. இவ்வூரைப்பற்றி ஆங்கிலேய தளபதி வெல்ஷ் குறிப்பிடுகையில் அரண்மனை தோற்றத்தில் சிறியதாக இருந்தாலும் உறுதியாக இருந்ததாகவும், இரு மருங்கிலும் தெருவில் நிழல் தரும் மரங்கள் அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உடும்பன் பட்டியான குடும்பன்பட்டி.
இவ்வூருக்கு அருகில் உடும்பன் பட்டி என வழங்கப்படும் ஊரானது நீர் மேலாண்மை செய்து வேளாண்மையை பெருக்கும் குடும்பர் இன மக்கள் வாழும் இடமாக உள்ளது. இவ்வூரைச் சுற்றி திருத்திப் பட்டி போன்ற ஊர்களிலும் இவர்கள் வாழ்வதோடு சிறுவயலில் பழங்காலந் தொட்டு இம் இன மக்கள் வாழ்ந்து வருவதால்
ஊரை உடையவன் எனும் பொருளில் ஊரான் என்று வழங்கப்படுகின்றனர். இவ்வாறாக பண்டைய காலந் தொட்டு இவ்வூர் வேளாண்மையில் செழித்திருந்தது எனலாம்.
உ.வே.சா அரண்மனை சிறுவயலுக்கு வருகை.
அன்றைய இராமநாதபுரம் பகுதியான செவ்வூருக்கும் மிதிலைப் பட்டிக்கும் ஓலைச்சுவடி சேகரிக்க வந்த உ.வே.சா அவர்கள் குன்றக்குடி ஆதீன மடத்திற்கு வந்து விட்டு அங்கிருந்து அரண்மனை சிறுவயல் ஜமீன்தாராகிய முத்துராமலிங்கத் தேவரை பார்க்க பலமுறை அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அரண்மனை சிறுவயலுக்கு வந்திருந்தார். மேலும் அரண்மனை சிறுவயல் ஜமீன்தார் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி உ.வே.சா குறிப்பிடுகையில் தமிழ், வடமொழி, ஆகிய இரண்டிலும் பற்றுடையவராக இருந்ததோடு தெலுங்கு மொழியிலும் திறன் உடையவராக இருந்தார். இராமலிங்கம் பிள்ளை என்ற தமிழ் வித்துவானும் திருக்கோஷ்டியூர் சாமிநாத சாஸ்திரிகள் என்ற சமஸ்கிருத பண்டிதரும் அவருடைய ஆஸ்தான வித்துவான்களாக இருந்தனர். சிறுவயல் ஜமீன்தார் மருது பாண்டியரை பற்றிய பல வரலாறுகளை சொன்னார். நான் வசித்து வரும் இந்த மாளிகை மருது பாண்டியர் இருந்த அரண்மனையாகும் என்று அவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலப்பதிகாரத்தை பதிப்பிக்க என்னால் ஆன பொருள் உதவிகளை செய்வதாகச் சொன்னார். சிறுவயல் ஜமீன்தாராகிய முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதிக்கு பாட்டனார் முறையினர் ஆவார். ராமநாதபுரம் நவராத்திரி விழாவிற்கு நான் சென்றிருந்த பொழுது மணிமேகலை, புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை இவைகளை எல்லாம் பதிப்பிக்க இருக்கிறேன் என்று சொன்னபோது நான் வெளியிடும் நூல்களுக்கு பொருள் உதவி செய்வதாக அவர் வாக்களித்தார் என்றும் என் சரிதம் நூலில் உ.வே.சா குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக தமிழுக்கு தொண்டு செய்த ஊராக அரண்மனை சிறுவயல் விளங்கி இருக்கிறது.
தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டு அரண்மனை பாதுகாக்கப்பட்டாலும் இதே ஊரில் தமிழுக்கு தொண்டு செய்த ஜமீன்தார் முத்துராமலிங்கத் தேவர் தங்கி இருந்த அரண்மனைப் பகுதி இடிபாட்டுடன் இன்னும் இருக்கிறது அதில் அவர்களது வம்சாவளியினர் வீரத்தின் எச்சமாக வாள், ஈட்டி,வளரி போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
வளரி
வளைதடி 'வளரி' என்றழைக்கப்படும் ஆயுதம் தென் மாவட்டங்களில் பரவலாக வேட்டை சமூகத்தாரும் காவல் சமூகத் தாரும் பயன்படுத்தி வந்த ஒன்றாகும். இன்றும்கூட கிராமப்புறங்களில் ஒரு சில வீடுகளில் வளைதடி கள் இருந்து பயன்படுத்தாமல் பயனற்று போனதாக கூறக் கேட்கலாம். பொதுவாக மனிதன் ஆடு மாடுகளை மேய்த்துத் திரியும் போதும் அவற்றைக் காக்க வேற்று விலங்குகளை விரட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம், இன்றும் ஆடுமாடுகள் மேய்ப்போர் கையில் தடி ஒன்றை வைத்து இருப்பதை நாம் காணமுடியும். மீண்டும் நம் கைக்கு வருவது போர்த் தொழிலில் நமக்கு இருந்த தொழில்நுட்ப அறிவை விளக்குகிறது. கொரில்லா போர்முறையைப் போன்றதாகவும் பார்க்கப்படுகிறது. எதிராளியை தாக்கி நிலைகுலையச் செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும். வளரி வீசுவது போர்க் கலைகளில் ஒன்றாக பின்னால் பயிற்சிபெற பெற்றிருக்கலாம். சிவகங்கைச் சீமை மருது சகோதரர்கள் வளரி வீசுவதில் வல்லவராக விளங்கியதாகக் கூறுவர். பூமராங் போன்ற கருவிகள் வளைதடியின் வளர்ச்சி நிலையாகக் கொள்ளலாம். பட்டை தெய்வங்களின் கையில் அருவா போன்ற ஆயுதங்கள் வருவதற்கு முன் வளைத்தடிகளே இருந்திருக்கும் இன்றும் பல இடங்களில் வளைதடி வழிபாடு பொருளாக இருக்கிறது. பெருமாளின் கையில் இருக்கும் திகிரி என்னும் சக்கரமும் பகைவரை தாக்கி அழித்துவிட்டு மீண்டும் அவர் கைக்கு வரும் என்பர். எப்படியாயினும் வளரி நமது பண்பாட்டு எச்ச நீட்சி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை”. என்றார்.
தமிழைப் பாதுகாத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அரண்மனை சிறுவயலை நாமும் பாதுகாக்க முனைவோம்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion