இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வரும் சூழலில், கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையாக அனுசரிக்கப்படும் என்பதால் தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்தது.
முதலாம் ஆண்டு நினைவு நாள்:
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் தே.மு.தி.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதிய அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்துள்ள பிரபல நடிகர் விஜய்க்கும் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சித் தொடங்கியது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு விஜய் மீது உள்ளது. ஆனால், அவர் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களையே தனது வீட்டிற்கு அழைத்து நிவாரணம் அளித்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் திரைவாழ்வில் முக்கிய திருப்பத்தைத் தந்தவரான கேப்டன் விஜயகாந்தின் நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஞ்சலி செலுத்த வருகிறாரா விஜய்?
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி அரசியல் மாநாட்டிற்கு பிறகு அம்பேத்கர் புத்தக வெளியீ்ட்டு விழாவில் பங்கேற்ற விஜய், அதன்பின்பு இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. விஜயகாந்த் நினைவிடத்திற்கு விஜய் அஞ்சலி செலுத்த வர இருக்கும் தகவலால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
விஜய்யின் தொடக்க காலத்தில் விஜய்க்காக நடிகர் விஜயகாந்த் செந்தூரப் பாண்டி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் விஜய்க்கும் நல்ல செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. மேலும், நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்திலும் சில படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார்.
விஜயகாந்தின் ரசிகர்களின் ஆதரவு:
இவ்வாறு விஜய்யின் திரை வாழ்வு ஏற்றத்திற்கு முக்கிய அடித்தளமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று விஜய் அஞ்சலி செலுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜயகாந்த்தின் ரசிகர்கள், தொண்டர்களின் ஆதரவும் விஜய்க்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தேவைப்படும் என்பதால் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவே விரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.