Youtube Shorts : டிக்டாக்குக்கு பதிலாக மாஸ் ப்ளான்? புது ரூட்டை அறிமுகப்படுத்துதா யூ ட்யூப் ஷார்ட்ஸ்?
தொழில்முறை போட்டியாக உள்ள டிக்டாக்கை மிஞ்சும் விதமாக, யூடியூபின் ஷார்ட்ஸ் பயனாளர்களுக்கு மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும், சர்வதேச அளவில் டிக்டாக் செயலி கோடிக்கணக்கான பயனாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தங்களது ஆடல், பாடல் மற்றும் நடிப்பு போன்ற தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், சிறிய வீடியோக்களை வெளியிடும் டிக்டாக்கின் செயல்பாடு பயனாளர்களை வெகுவாக கவர்ந்து அமோக வரவேற்பு பெற்றது. இதன் காராணமாக, அதைபோன்ற செயலிகளுக்கான சந்தையும் விரிவடைந்த நிலையில், டிக்டாக் போன்ற அம்சங்கள் கொண்ட பல்வேறு புதிய செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வகையில்தான் கடந்த 2020 ஆம் ஆண்டு, யூடியூப் நிறுவனம் யூடியூப் ஷார்ட்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
அதைதொடர்ந்து, யூடியூபின் ஷார்ட்ஸ் மற்றும் டிக்டாக் பெரும் வளர்ச்சி பெற்று, குறிப்பிட்ட துறையில் முதல் இரண்டு இடங்களை மாறி மாறி ஆக்கிரமித்து வருகின்றன. டிக்டாக் நிறுவனம் 1 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனாளர்களை கொண்டுள்ள நிலையில், யூடியூப் ஷார்ட்ஸ் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1.5 பில்லியன் பயனாளர்களை எட்டியுள்ளது. யூடியூப் ஷார்ட்ஷில் பயனாளர்கள் 60 விநாடிகள் வரையில் தற்போது வீடியோ பதிவிடலாம். தொடர்ந்து, பயனாளர்களுக்கும், கன்டெண்ட் கிரியேட்டர்களுக்கும் தேவையான பல்வேறு வசதிகளையும், அவர்களை கவரும் விதமான புதிய அம்சங்களையும் யூடியூப் நிறுவனம் அடுத்தடுத்த அப்டேட்களில் வழங்கி வருகிறது.
அந்த வகையில் கன்டெண்ட் கிரியேட்டர்கள் காப்புரிமை பிரச்னை இன்றி, எந்தவொரு பிரபலமான இசையையும் 15 விநாடிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, யூடியூப் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. பல பிரபலமான இசையையும் தங்களது வீடியோக்களில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், தங்களது வீடியோக்களுக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என, யூடியூப் நிறுவனத்தின் முடிவிற்கு கன்டெண்ட் கிரியேட்டர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், காப்புரிமை பெற்ற இசையை ஒரு நிமிடம் வரையில் கன்டெண்ட் கிரியேட்டர்கள் பயன்படுத்த்திக்கொள்ளலாம், என்ற அனுமதியை வழங்க யூடியூப் ஷர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கன்டெண்ட் கிரியேட்டர்கள் 30-லிருந்து 60 விநாடிகள் வரை எந்தவொரு பிரபலமான இசையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அதற்கு காப்புரிமை பிரச்னை எழுப்பப்படமாட்டாது எனவும் கூறப்படுகிறது. அதேநேரம் காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட இசைக்கு மட்டும், பயன்பாட்டிற்கான நேர வரையறை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், டிக்டாக்கை காட்டிலும் கூடுதல் பயனாளர்களை ஈர்க்க யூடியூப் ஷார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சில பயனாளர்களுக்கு இந்த அம்சத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அனைத்து வகையான செல்போன் மாடல்களிலும் புதிய அப்டேட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.






















