YOUTUBE: 3 மாதங்களில் 56 லட்சம் வீடியோக்களை நீக்கிய யூடியூப்.. இந்தியாவிற்கு முதலிடம்
விதிமுறைகளை மீறியதாக சர்வதேச அளவில் 3 மாதங்களில் மட்டும், 56 லட்சம் வீடியோக்களை தனது தளத்தில் இருந்து யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.
வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி என்ற காலமெல்லாம் மலையேறி போக, இப்போது ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன் என நிலைமை மாறியுள்ளது. அதில், சென்னையின் அண்ணாசாலையில் இருந்து அண்டார்டிகா வரையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும், கையடக்கத்தில் கண்முன் காட்டுகிறது யூடியூப். இதனால், தான், சமூக வலைதள கணக்குகள் இல்லாத நபர்களை கூட பார்க்க முடிகிறது. ஆனால் யூடியூப்பை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது என்பது அரிதாக மாறியுள்ளது. தனிநபருக்கான தொலைக்காட்சி எனும் வகையில் உலக அளவில், யூடியூப் பயன்பாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பார்வையாளர்களின் பொழுதுபோக்கு என்பதை தாண்டி, பலரின் வாழ்வாதாரமாகவும் யூடியூப் மாறியுள்ளது. இதற்காகவே தனக்கென சட்ட, திட்டங்களை வகுத்து, தங்களது தளத்தில் வீடியோ பதிவு செய்பவர்களுக்கு என பல கட்டுப்பாடுகளையும் யூ-டியூப் நிறுவனம் விதித்துள்ளது. அவற்றை மீறினாலோ, வீடியோ தொடர்பாக பார்வையாளர்களிடமிருந்து புகார்கள் கிடைத்தாலோ, யூடியூப் நிறுவனம் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
56 லட்சம் வீடியோக்கள் நீக்கம்:
இந்நிலையில், கடந்த ஜுலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் மட்டும், உலக அளவில் யூடியூப் தளத்தில் இருந்து 56 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை பாதுகாப்பு, வன்முறை, நிர்வாணம், கொடுமைப்படுத்துதல் மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் உள்ளடக்கம் ஆகியவை முதன்மை காரணங்களாக உள்ளன. இதே காலகட்டத்தில் தான் 50 லட்சத்திற்கும் அதிகமான சேனல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தவறாக வழிநடத்தும் தரவுகள், தம்ப்னெயில்ஸ், மோசடிகள், வீடியோ மற்றும் ஸ்பேம் கருத்துகள் ஆகியவற்றில் விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு முதலிடம்:
அதிகபட்சமாக இந்தியாவில் மட்டும் கடந்த ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 17, 07,204 யூடியூப் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. அதைதொடர்ந்து, இந்தோனேஷியாவில் 6,28,539 வீடியோக்கள் கடந்த 3 மாதங்களில் நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலகட்டத்திலும், இந்தியாவில் 13 லட்சம் வீடியோக்கள் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தானியங்கு முறையில் நீக்கப்படும் வீடியோக்கள்:
நீக்கப்பட்ட வீடியோக்களில் 94% தானியங்கு முறையில் விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டவை எனவும், 68% வீடியோக்கள் 10 பார்வைகளை கூட பெறுவதற்கு முன்பே நீக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 வீடியோக்கள் மட்டுமே சர்வதேச அளவில் அரசாங்க அமைப்புகளால், புகாரளிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் மக்களின் கருத்துகளின் அடிப்படையில், 73.75 கோடி கமெண்டுகளை நீக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூ-டியூப் நடவடிக்கை:
இரண்டு மாதங்களில் மட்டும் குறிப்பிட்ட வீடியோக்களை நீக்கியது தொடர்பாக 2.71 லட்சம் மேல்முறையீட்டு புகார்கள் கிடைக்கப்பெற்றதாகவும், விசாரணைக்குப் பின் 29,000 வீடியோக்கள் மீண்டும் யூடியூபில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், ஒவ்வொரு 10,000 வியூசின் போதும் சராசரியாக 10 மற்றும் 11வது வீடியோக்களில் வழிகட்டு நெறிமுறைகள் மீறப்பட்டு இருந்துள்ளது. வீடியோக்கள் நீக்கப்படுவது தொடர்பான மேல்முறையீட்டு கோரிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதன் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் பயனாளர்களுக்கு தெளிவுபடுத்தப்படுகிறது எனவும் யூ-டியூப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.