Aditya L1: லெக்ராஞ்சியன் 1 புள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? ஆதித்யா எல்1-க்கு உள்ள பெரிய ஆபத்து என்ன?
சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலத்தை நிலைநிறுத்த லெக்ராஞ்சியன் 1 புள்ளியை, இஸ்ரோ தேர்ந்து எடுத்தது ஏன் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலத்தை நிலைநிறுத்த லெக்ராஞ்சியன் 1 புள்ளியை, இஸ்ரோ தேர்ந்து எடுத்தது ஏன் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ஆதித்யா எல்1 விண்கலம்:
நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக, ஆதித்யா எல்1 எனும் விண்கலம் செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 100 நாட்கள் பயணிக்கும் அந்த விண்கலம் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் சென்று லெக்ராஞ்சியன் 1 (L1) என்ற புள்ளியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது பூமியிலிருந்து நிலா அமைந்து இருக்கும் தூரத்த விட 4 மடங்கு அதிகம் ஆகும். அந்த இடத்தில் இருந்து தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆதித்யா எல்1 விண்கலம் சூரியன் தொடர்பான ஆய்வுகளை செய்ய உள்ளது.
லெக்ராஞ்சியன் புள்ளி என்றால் என்ன?
இரண்டு பெரும் வான்பொருட்களின் சுற்றுப்பாதைகளின் இடையே, அவற்றின் ஈர்ப்பு விசை தாக்கத்தால் ஓர் சிறிய வான்பொருள் நிலையான இடத்தை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய சூழல் நிலவும் ஒரு புள்ளி தான் லெக்ராஞ்சியப் புள்ளி என அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில், இரு பெரும் வான்பொருட்களின் ஈர்ப்புவிசைகளின் கூட்டுவிசையால், சிறுபொருள் அவற்றைச் சுற்ற தேவையான மையநோக்கு விசையை பெறுகிறது. சூரியனை சுற்றி ஐந்து லெக்ராஞ்சிய புள்ளிகள் உள்ளன. அவற்றில் எல்1, எல்2 மற்றும் எல் 3 ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன என்பதை பிரான்சை சேர்ந்த ஆராய்ச்சியாளர் லெக்ராஞ்சி என்பவர் கண்டறிந்தார். சூரியன் மட்டுமின்றி வியாழன் போன்ற மற்ற கிரகங்களுக்கும் இதுபோன்ற லெக்ராஞ்சிய புள்ளிகள் உள்ளன.
லெக்ராஞ்சியப் புள்ளி 1 தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?
இந்நிலையில். லெக்ராஞ்சியப் புள்ளி 1 தேர்ந்து எடுக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக, நாசாவில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் மிலா மித்ரா விளக்கியுள்ளார். அதன்படி, “லெக்ராஞ்சியப் புள்ளி என்பது இது மிகவும் நிலையான புள்ளி. இது பூமி மற்றும் சூரியன் இரண்டின் ஈர்ப்பு விசைக்கு இடையே சமமான தொலைவில் உள்ளது. எனவே எல்1 புள்ளியில் இருந்து எந்தவொரு சூழலிலும் ஆதித்யா எல்1 செயற்கைகோள் தொடர்ந்து சூரியனை கண்காணிக்கலாம். அதாவது கிரகணம் போன்ற எந்தவொரு வானியல் நிகழ்வும் ஆதித்யா எல் 1 பார்வையிலிருந்து சூரியனை விலக்க முடியாது. இதன் மூலம், எந்தவொரு சூழலிலும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான தகவல்களை ஆதித்யா எல்1 சேகரிக்கும்.
சவால் என்ன?
அதேநேரம், இந்த திட்டத்தில் எல்-1 புள்ளியை நோக்கி பயணிப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது, சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகியவை பூமிக்கு அருகில் உள்ளது. ஆனால், சூரியன் அப்படி கிடையாது. அதுதொடர்பான ஆய்விற்காக ஆதித்யா எல்.1 விண்கலம் 1.5 மில்லியன் கிலோ மீட்டர்கள் தூரம் பயணிக்க உள்ளது. சூரியனிலிருந்து வெளிப்படும் அதிகப்படியான வெப்பம் மற்றும் கதிர்வீச்சிலிருந்து செயற்கைக்கோளை காப்பாற்றுவதே சவாலானதாக இருக்கும். அதை நம்மால் சாதிக்க முடிகிறதா என்பதை நமது தொழில்நுட்பம் காட்டும்” என்று மிலா மித்ரா விளக்கியுள்ளார்.