Whatsapp Feature: அடுத்த அப்டேட்: சாட்களுக்கு ’சீக்ரெட் கோட்'... வாட்ஸ் அப்பில் வரப்போகும் புதிய வசதி!
வாட்ஸ் அப்பில் 'சீக்ரெட் கோட்’ என்ற புதிய ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Whatsapp Feature: வாட்ஸ் அப்பில் 'சீக்ரெட் கோட்’ என்ற புதிய ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் அப்:
தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய வசதி:
அதன்படி, வாட்ஸ் அப்பில், 'சீக்ரெட் கோட்’ என்ற புதிய ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, குறிப்பிட்ட சாட்களை மட்டும் பிங்கர் பிரிண்ட், ஃபேஸ்லாக் பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்யும் வசதி இருக்கிறது. இந்த வசதி பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீக்ரெட் கோட் (Secret Code) என்ற ஆப்ஷனை வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் தங்கள் சாட்களை தனிப்பட்ட பாஸ்வோர்ட் மூலம் பாதுகாக்க முடியும். இந்த சீக்ரெட் கோட் அம்சம் பயனாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. தற்போது, இந்த அம்சம் சோதனையில் இருப்பதாகவும், விரைவில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த வசதி ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் என அனைத்து யூசர்களுக்கு கிடைக்கும்.
எப்படி வேலை செய்யும்?
முதலில், நாம் யாருடைய சாட்டை லாக் செய் வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த சாட்டில் சீக்ரெட் கோட் ஆப்ஷனுக்கு சென்று பாஸ்வேர்ட்டை பதிவிட்டு லாக் செய்துவிடலாம். அடுத்த முறை வாட்ஸ் அப் ஓபன் செய்யும்போது, search bar-ல் நாம் அந்த சீக்ரெட் கோட் பாஸ்வேர்ட்டைபோட்டால் மட்டுமே, நம்மால் குறிப்பிட்ட சாட்களுக்கு செல்ல முடியும். இந்த சீக்ரெட் கோடில், எண்கள், எமோஜிகள், வார்த்தைகள் என அனைத்தையும் சீக்ரெட் கோட்டாக வைக்கலாம்.
அண்மையில் வந்த வசதி:
சமீபத்தில் சேனல்கள் எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. சேனல்கள் என்பது உரை, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை அனுப்ப உதவும் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும். பயனர்கள் தங்களின் தேவைகள் மற்றும் விருப்பத்தின் பேரில் பின்தொடர வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுக்க ஒருவித கோப்பகத்தை ( searchable directory ) வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்குகிறது. அதனை பயன்படுத்தி பொழுதுபோக்குகள், விளையாட்டுக் குழுக்கள், உள்ளூர் செய்திகள் போன்றவை தொடர்பான சேனல்களை விருப்பத்தின் பேரின் பயனாளர்கள் தேர்வு செய்யலாம்.