Whatsapp Group Call | வீடியோகால் இனி மிஸ்ஸே ஆகாது.. வாட்ஸ் அப் கொண்டுவந்த புதிய அப்டேட்!
அசத்தலான குரூப் வீடியோ கால் அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் அப்.
உலகளவில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸ் அப். புதுசு புதுசாக பயனர்களை கவரும் அப்டேட்களை கொடுத்து தம் செயலியையும் நிகழ்கால அப்டேட்டிலேயே வைத்திருக்கிறது அந்நிறுவனம். கவர்ச்சியானதாக மட்டுமே இல்லாமல் தனிநபர் தகவல் பாதுகாப்புக்காகவும், சமூக அக்கறையுடனும் பல்வேறு அப்டேட்கள் கொண்டுவரப்படுகின்றன.
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு வேறுபட்ட பயனாளர்களுக்கும் பல அப்டேட்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துவண்ணமே உள்ளது. வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக இருந்த வாட்ஸ் அப்பில் , போன் பேசும் வசதி, வீடியோ கால் வசதி, பண பரிமாற்றம் என அடுத்தடுத்த அப்டேட்கள் வந்தன. இந்த நிலையில் வீடியோ கால் அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் அப். குரூப் வீடியோ கால் அழைக்கப்பட்ட போது அதில் இணையவில்லை என்றாலும், அதற்கான அழைப்பு வெய்ட்டிங்கில் இருக்கும். அதன் பின்னர் குரூப் காலில் நாம் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட குரூப் இயக்கத்தில் இருக்க வேண்டும். இது கூகுள், ஜூம் மீட் போன்றதுதான்.
முன்னதாக, ஐஓஎஸ் குரூப் கால் வசதியில் புதிய அப்டேட்டை சோதனை முறையில் கொண்டு வந்தது வாட்ஸ் அப். 2.21.140.11 வெர்ஷனில் பீட்டா அப்டேட்டாக இந்த குரூப் கால் அப்டேட் வந்தது. ஒரு வெயிட்டிங் கால் ஆப்ஷனைப் போலவே இது கொடுக்கப்பட்டது. யாராவது உங்களுக்கு குரூப் கால் அழைப்பு கொடுத்தால் உங்களது ஸ்கிரீனில் அது தெரியும். ஸ்கிரீனின் கீழ் பகுதியில் ரிங் பட்டனும் உள்ளது. குறிப்பிட்ட குரூப் கால் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால் நீங்கள் மறுபடி எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணையலாம். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் “Tap to join” மூலம் இணைந்து கொள்ளலாம். வேண்டுமானால் வீடியோ காலை தவிர்க்க ‘ignore’ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புது அப்டேட்டால் பயனாளர்களின் பிரைவசிக்கு எந்த பாதிப்பு இல்லை என்றும் வாட்ஸ் அப் தெளிவுபடுத்தியுள்ளது. இதுவும் பாதுகாப்பான எண்டு டூ எண்ட் கிரிப்ட் முறையில்தான் இயக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட்டால் இனி குரூப் அழைப்புகளை பயனர்கள் மிஸ் செய்ய மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த நேரத்திலும் குரூப் அழைப்பில் இணைந்துகொள்ளலாம் என்பதால் அதிக பயனர்களை உள்ளடக்கி இனி குரூப் அழைப்புகள் இருக்கும். வீடியோ அழைப்புகளுக்கு மட்டுமின்றி வாய்ஸ் அழைப்புகளுக்கும் இந்த அப்டேட் பொருந்தும் என வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது. இந்த அப்டேட் தொடர்பான தகவலை வாட்ஸ் அப் உரிமையாளர் மார்க் ஜுகர்பெர்க்கும் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தார்.