Whatsapp New : அநாவசிய மெசேஜ்கள் வந்து தொல்லையா? வாட்ஸ்-அப்பில் வந்த புதிய அப்டேட்..
அநாவசியமாக குறுந்தகவல்களை அனுப்பும் நபர்களை எளிதில் பிளாக் செய்வதற்கான, புதிய அப்டேட் விரைவில் வாட்ஸ்-அப் செயலியில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்-அப் செயலி:
வாட்ஸ்-அப் இந்தியாவின் மிகப்பெரிய பயனர் எண்ணிக்கையை கொண்ட பரவலான செயலி. குறுந்தகவல்களை பகிர்வதற்கான இந்த செயலியை மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாதான் அதிகம் பயன்படுத்துகிறது. குறுஞ்செய்திகளை அனுப்பும் எளிய செயலிதான் என்றாலும், அந்த எளிமைதான் இந்த செயலியின் முதலீடாகவும் உள்ளது. எளிதாக யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில் டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் செய்ய முடிந்த இந்த செயலியில் புகைப்படங்கள், வீடியோக்களும் எளிதாக அனுப்ப முடியும் என்பதால் டெக்னாலஜியை புதிதாக பயன்படுத்துபவர்கள் கூட விரைவில் புரிந்துகொண்டு இந்த செயலியை பயன்படுத்த விரும்புகின்றனர்.
மெட்டா நிறுவனம், இந்த செயலியை பயன்படுத்துவதில் பயனர்களை திருப்தி அடைவதையே முழு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனால் அவ்வப்போது பயனர்களுக்கு இலகுவான விஷயங்களை அப்டேட் செய்து, செயலியை மென்மேலும் மெருகேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது, வாட்ஸ்-அப் செயலியில் அநாவசிய குறுந்தகவல்களை அனுப்பும் நபர்களை, எளிதில் பிளாக் செய்வதற்கான புதிய அப்டேட் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எளிதில் பிளாக் செய்யும் அப்டேட்:
வழக்கமாக குறிப்பிட்ட நபரிடமிருந்து குறுந்தகவல் வருவதை தவிர்க்க விரும்புவோர், வாட்ஸ்-அப் செயலியில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷன் மூலம் அந்த நபரை பிளாக் செய்யலாம். அல்லது சாட் விண்டோ மூலமாகவும் பிளாக் செய்யலாம் இதற்கு பயனாளர்களுக்கு சிறிது நேரம் ஆகும். அதனை தவிர்க்கும் நோக்கில் புதிய அப்டேட் வழங்க மெட்டா நிறுவனம் முயன்று வருகிறது.
பயன்பாடு என்ன?
புதிய அப்டேட்டின் மூலம், வாட்ஸ்-அப் செயலிக்குள் நுழையாமலேயே ஒருவரை பிளாக் செய்ய முடியும். அதாவது குறுந்தகவலின் நோடிபிகேஷன் ஆப்ஷனை பயன்படுத்தியே ஒருவரை பிளாக் செய்யலாம். அதன்படி, செல்போனில் சேமிக்கப்படாத எண்கள் அல்லது ஸ்பேம் எண்களில் இருந்து குறுந்தகவல் வரும்போது, TAB BLOCK எனும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் மூலம், தெரியாத எண்களில் இருந்து குறுந்தகவல் வந்தால், உடனடியாக பயனாளரால் அதனை பிளாக் செய்ய முடியும். மற்றொரு வகையில் நமது தொடர்பில் உள்ள ஒருவரை பிளாக் செய்ய, contact> tap on three dot > block எனும் புதிய ஆப்ஷனை வழங்குவது குறித்தும், வாட்ஸ்-அப் செயலி பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெரிஃபிகேஷன் கோட் அம்சம்:
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வாட்ஸ்-அப் கணக்கு இணைக்கப்பட்டால், முதன்மை டிவைஸ் ஆன பயனாளரின் செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் செயலியின் முகப்பு பக்கத்தில் வெரிபிகேஷன் கோட் தோன்றும். தரவுகள் பாதுகாப்பு தொடர்பான இந்த புதிய அப்டேட் அண்மையில் சோதனை அடிப்படையில் அறிமுகமானது.
அண்மையில் வழங்கப்பட்ட அப்டேட்:
அவதார் என்ற ஆப்ஷன் மூலம், பயனர்கள் தங்களுக்கான அவதாரங்களை உருவாக்கி அதைத் தங்கள் டிபி-யாக அமைக்க முடியும். இந்த அம்சம் சமீபத்திய iOS மற்றும் Android புதுப்பிப்புகளுடன் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் வாட்ஸ்-அப் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக 21 புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்துள்ளது. ஒருமுறை மட்டுமர் படிக்கக்கூடிய செய்தியும் தற்போது அனுப்ப முடியும். ஒருமுறை அந்த செய்தியைப் பெறுபவர் அதைப் படித்த பிறகு சாட்டில் இருந்து மறைந்துவிடும். ஸ்க்ரீன்ஷாட்டும் எடுக்க முடியாது.