24 மணி நேரத்தில் மறையும் - வருகிறது வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்
அனுப்பப்படும் தகவல்கள் 24 மணி நேரத்தில் மறையும் வகையில் புதிய அப்டேட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளது வாட்ஸ் அப்.
தகவல் பரிமாற்றத்தில் முக்கிய செயலியாக இருப்பது வாட்ஸ் அப். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது இந்த செயலி. பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவமான வாட்ஸ் அப், பயனர்களை கவரவும், பயன்பாட்டுக்கு ஏதுவாகவும் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை கொடுத்துவருகிறது. புதிய அப்டேட்கள் எதுவாக இருந்தாலும் முதலில் சோதனை முறையில் கொண்டு வரப்பட்டு பின்னர் பயனர்களிடையே வரவேற்பு இருந்தால் அதனை நடைமுறைப்படுத்துகிறது வாட்ஸ் அப்.
இந்நிலையில் அனுப்பப்படும் தகவல்கள் 24 மணி நேரத்தில் மறையும் வகையில் பயனர்கள் செட் செய்துகொள்ளும் புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் கொண்டு வரவுள்ளது. தற்போது வாட்ஸ் அப்பில் 7 நாட்களில் தகவல்கள் தானாக மறையும் வகையில் செட் செய்துகொள்ளும் ஆப்ஷன் உள்ளது. இந்த அப்டேட் கடந்த வருடம் கொண்டுவரப்பட்டது. அதனை தற்போது 24 மணி நேரமாக மாற்றி அப்டேட் கொடுக்கவுள்ளது.
இந்த அப்டேட்டை ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் வாட்ஸ் அப் சோதனை செய்து வருகிறது. இந்த புதிய ஆப்ஷனை சோதனை முறையில் தற்போது கொண்டுவரவுள்ளதாகவும், பீட்டா பயனர்களிடம் வரவேற்பு பெற்றால் விரைவில் அனைவருக்கும் இந்த அப்டேட் கிடைக்கப்பெறும் என வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது.