WhatsApp Update | இனி மிஸ் ஆகாது.. வாட்ஸ் அப் கால் வசதியில் ஒரு அசத்தல் அப்டேட் முயற்சி!
கவர்ச்சியானதாக மட்டுமே இல்லாமல் தனிநபர் தகவல் பாதுகாப்புக்காகவும், சமூக அக்கறையுடனும் பல்வேறு அப்டேட்கள் கொண்டுவரப்படுகின்றன
உலகளவில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் தகவல்பரிமாற்ற செயலி வாட்ஸ் அப். புதுசு புதுசாக பயனர்களை கவரும் அப்டேட்களை கொடுத்து தம் செயலியையும் நிகழ்கால அப்டேட்டிலேயே வைத்திருக்கிறது அந்நிறுவனம். கவர்ச்சியானதாக மட்டுமே இல்லாமல் தனிநபர் தகவல் பாதுகாப்புக்காகவும், சமூக அக்கறையுடனும் பல்வேறு அப்டேட்கள் கொண்டுவரப்படுகின்றன.
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு வேறுபட்ட பயனாளர்களுக்கும் பல அப்டேட்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துவண்ணமே உள்ளது. வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக இருந்த வாட்ஸ் அப்பில் , போன் பேசும் வசதி, வீடியோ கால் வசதி, பண பரிமாற்றம் என அடுத்தடுத்த அப்டேட்கள் வந்தன. இந்த நிலையில் ஐஓஎஸ் குரூப் கால் வசதியில் புதிய அப்டேட்டை சோதனை முறையில் கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப். 2.21.140.11 வெர்ஷனில் பீட்டா அப்டேட்டாக இந்த குரூப் கால் அப்டேட் வந்துள்ளது. ஒரு வெயிட்டிங் கால் ஆப்ஷனைப் போலவே இது கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாட்ஸ் அப் காலில் இருந்தாலும் யாராவது உங்களுக்கு குரூப் கால் அழைப்பு கொடுத்தால் உங்களது ஸ்கிரீனில் அது தெரியும். ஸ்கிரீனின் கீழ் பகுதியில் ரிங் பட்டனும் உள்ளது. குரூப் கால்-க்கு அழைப்பு விடுக்கும் போது உங்களால் இணைய முடியவில்லை என்றாலும் அந்த அழைப்பு திரையிலேயே நிற்கும். குறிப்பிட்ட குரூப் கால் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால் நீங்கள் மறுபடி எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணையலாம். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் “Tap to join” மூலம் இணைந்து கொள்ளலாம்.
இப்போது இந்த பீட்டா சோதனை ஐஓஎஸ்-ல் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது.விரைவில் இது ஆண்ட்ராய்டிலும் சோதனை செய்யப்படும் எனத் தெரிகிறது. ஐஓஎஸ் பீட்டாவிலும் இந்த வசதி கிடைக்கவில்லை என்பவர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் இதுபோன்று புதுசு புதுசா, தினுசு தினுசா புதுமைகளைப் புகுத்தி வருகிறது. அந்த வகையில் வியூவ் ஒன்ஸ் என்ற வசதியையும் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதன்படி நீங்கள் உங்களின் நண்பருக்கோ உறவினருக்கோ ஒரு ஃபோட்டோவை அனுப்பி அதை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்படி செய்யலாம். அதற்கு படத்தை அனுப்புவதற்கு முன்னதாக சாட் இன்புட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து 1 என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அனுப்பலாம். ஆனால், இந்த வசதியும் இப்போதைக்கு சோதனை முயற்சியிலேயே உள்ளது.
அதேபோல் வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பும் வீடியோவின் தரத்தை நீங்களே ஃபிக்ஸ் செய்துகொள்ளும் வகையில் மூன்று ஆப்ஷன்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது அந்நிறுவனம். அடுத்து வரவிருக்கும் வாட்ஸ் அப் அப்டேட்டில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம் எனக் கூறப்படுகிறது. இப்போதைக்கு இந்த வசதி வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சன் 2.21.14.6ல் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது.