Whatsapp Update: இனி அட்மின் கையில் அதிகாரம்..! வாட்ஸ்-அப்பில் வருகிறது புதிய அப்டேட்..!
வாட்ஸ்-அப் செயலியில் குழுக்களை நிர்வகிப்பதற்கு ஏற்றவாறு, அட்மினுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட புதிய அப்டேட்கள் வழங்கப்பட உள்ளன.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலியில் குழுக்களை நிர்வகிப்பதற்கு ஏற்றவாறு, அட்மினுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட இரண்டு புதிய அப்டேட்கள் வழங்கப்பட உள்ளன.
வாட்ஸ்-அப் செயலி:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், செயலியை தொடர்ந்து மேம்படுத்தும் நோக்கிலும் பயனாளர்களே போதும் போதும் என சொல்லும் அளவிற்கு அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்-அப் செயலியில் உள்ள குழுக்களை திறம்பட நிர்வகிப்பதற்கு ஏற்றவாறு, அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட இரண்டு புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
குரூப் நிர்வாகம்:
பல்வேறு நபர்கள் தொடர்பான தகவலை ஒரே நேரத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கில், வாட்ஸ்-அப் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேநேரம், சில குழுக்களில் வெளிநபர்கள் இணைவது, அநாவசியமான விவகாரங்கள் விவாதிக்கப்படுவது போன்ற சம்பவங்களும் நிகழ்கிறது. அந்த நேரங்களில் குறிப்பிட்ட நபர்களை குழுவில் சேர்ப்பது, நீக்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அட்மினுக்கு அதிகாரம் உண்டு. அதை மேலும் மேம்படுத்தும் நோக்கில், புதிய அப்டேட் ஒன்று வழங்கப்பட உள்ளது.
குழுவில் யார் இணையலாம்?
அதன்படி, புதிய அப்டேட் மூலம் ஒரு வாட்ஸ்-அப் குழுவில் யார் இணையலாம், யார் இணையக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அட்மின்கள் பெற உள்ளனர். அதாவது ஒரு குழுவில் சேர்வதற்கான இன்வைட் லிங்க் பகிரப்படலாமா? வேண்டாமா? என்பதை அட்மின் நிர்ணயிக்கலாம். அல்லது கம்யூனிட்டி மூலமாக யாரேனும் குழுவில் இணையும் வசதியையும் ஏற்படுத்தலாம். இதன் மூலம் தங்களது குழுவில் யார் இணையலாம், யார் இணையக்கூடாது என்பதை அட்மின் தீர்மானிக்கலாம்
குழு விவரங்களை அறிய அப்டேட்:
தெரிந்த நபர்களுடன் ஒரு பயனர் எந்தெந்த குழுக்களை பகிர்ந்துகொண்டுள்ளார் என்பதை அறிவதற்கான புதிய அப்டேட்டும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்பில் இருப்பவரின் பெயரை செயலியில் தேடுவதன் மூலம், எந்தெந்த குழுக்களில் இருவரும் இடம்பெற்றுள்ளனர் என்பதை அறியலாம். குழுவின் பெயர்களை நினைவுபடுத்திக் கொள்ளவும், இந்த புதிய அப்டேட் உதவும். குறிப்பிட்ட இந்த இரண்டு புதிய அப்டேட்களும் அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் தான் குழுவில் இணையக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, குழு உறுப்பினர்களால் அனுப்பப்பட்ட குறுந்தகவலை அட்மின் டெலிட் செய்வது போன்ற பல அப்டேட்கள் வழங்கப்பட்டன. இதோடு, வாட்ஸ்-அப் செயலியில் குரூப் சாட்டை மேம்படுத்துவதற்கான பல அப்டேட்கள் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.