புதிய விதிகளை ஏற்க முடியாது; ட்விட்டர் அறிவிப்பு
மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்க முடியாது ட்விட்டர் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது
இந்தியாவில் 50 லட்சம் பயனாளர்களுக்கு மேல் உள்ள சமூக வலைத்தளங்கள் இந்த புதிய விதிகளை ஏற்க வேண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்கள் இதை நிச்சயம் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளன. எனினும் இந்த விதிகளில் உள்ள சில விஷயங்களை எதிர்த்து இந்த நிறுவனங்கள் எதுவும் இதுவரை விதிகளை ஏற்கவில்லை.
இந்நிலையில் அரசின் விதிகளை ஏற்பது தொடர்பாக தொடர்பாக ட்விட்டருக்கு மத்திய அரசும், டெல்லி போலீசாரும் நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு விளக்கம் அளித்துள்ள ட்விட்டர், விதிகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது. அதில''இந்தியாவில் எங்கள் ஊழியர்கள் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளாலும், மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாலும் நாங்கள் கவலை கொள்கிறோம். இந்தியாவிலும் சரி, உலகளவிலும் சரி எங்களது விதிமுறைகளை தொடரவும், அரசின் புதிய விதிமுறைகளை அமல்படுத்தவும் நாங்கள் காவல்துறையால் மிரட்டப்படுவது கவலை அளிக்கிறது. கருத்து சுதந்திரத்தையும், வெளிப்படைத்தன்மையையும் தடுக்கும் இந்த விதிமுறைகளில் மாற்றம் கொண்டவர நாங்கள் திட்டமிடுகிறோம். இந்திய அரசுடன் இது தொடர்பாக ஆக்கப்பூர்வ ஆலோசனையில் ஈடுபடுவோம்'' என தெரிவித்துள்ளது.
முன்னதாக, மத்திய அரசின் விதிகளுக்கு வாட்ஸ் அப்பும் எதிர்ப்பு தெரிவித்தது. குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துகளை முதலில் பதிவிட்டது யார் என்பதை அறியும் வசதி என்பது சாத்தியமல்ல என்றும், அப்படி செய்தால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை தாங்கள் கண்காணிக்க வேண்டிவரும் என்றும் வாட்ஸ் அப் எதிர்ப்பு தெரிவித்தது. அதாவது வாட்ஸ் அப்பில் இருவர் தகவல் பரிமாறினால் அது அவர்களுக்குள்ளானது மட்டுமே. தங்களால் கூட அந்த தகவலை பார்க்க முடியாது என வாட்ஸ் அப் கூறி வருகிறது.
இந்த முறைதான் என்கிரிப்ஷன். இந்த பாதுகாப்பு முறையை உடைத்தால் மட்டுமே அரசு கூறும் விதிக்குள் வர முடியும். ஆனால் அப்படி வந்தால் பயனர்களின் தனியுரிமை கேள்விக்குறியாகிவிடும் என குறிப்பிடுகிறது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் வழக்கும் தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின. டுவிட்டர் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்திருக்கும் நிலையில், அதற்கு மத்திய அரசு எது மாதிரியான நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. அதிக பயன்பாட்டாளர்களை கொண்ட டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் தலைவலியாக வந்துள்ளதால், இருதரப்புக்கு இடையேயான பிரச்னை, அதை பயன்படுத்துபவர்களுக்கு என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல பல நாடுகளில் டுவிட்டர் உள்ளிட்ட ஆப்கள் பயன்படுத்த தடை இருக்கிறது. ஆனால் அங்குள்ள மக்கள் விபிஎன் போன்றவை பயன்படுத்தி டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் அது மாதிரியான நிலை ஏற்படுமா அல்லது தளர்வுகள் தரப்பட்டு மீண்டும் பழையபடி பயன்பாட்டிற்கு வருமா என்பது காலப்போக்கில் தான் தெரியவரும்.