விற்பனையில் 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தரவுகள்! இக்கட்டான நிலையில் மஸ்க்… மிரட்டும் ஹேக்கர்!
இந்த சாம்பிள் தரவுகள் மின்னஞ்சல், பெயர், பயனர்பெயர், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, உருவாக்கிய தேதி பயனர்களின் தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
400 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் தரவுகள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது, இது மிகப்பெரிய ட்விட்டர் தரவு மீறல்களில் ஒன்றாக விவரிக்கப்பட்டுள்ளது.
400 மில்லியன் பயனர் தரவுகள்
5.4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை பாதித்த முந்தைய ட்விட்டர் தரவு கசிவு குறித்த விசாரணையை ஐரிஷ் தரவு பாதுகாப்பு ஆணையம் (டிபிசி) அறிவித்த அடுத்த நாள் இந்த செய்தி வந்துள்ளது. முந்தைய தரவு மீறல் நவம்பர் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது. தரவு உண்மையானது என்பதை நிரூபிக்க, ஹேக்கர் ஒரு சாம்பிள் தரவுகளை வெளியிட்டுள்ளார். இந்த சாம்பிள் தரவுகள் மின்னஞ்சல், பெயர், பயனர்பெயர், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, உருவாக்கிய தேதி பயனர்களின் தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
சாம்பிள் தரவுகள்
அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஹேக்கரால் வழங்கப்பட்ட மாதிரி தரவு சில உயர் பதவியில் இருப்பவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது. அதில்,
- அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ்
- ஸ்பேஸ் எக்ஸ்
- சிபிஎஸ் மீடியா
- டொனால்ட் டிரம்ப் ஜூனியர்
- டோஜா கேட்
- சார்லி புத்
- சுந்தர் பிச்சை
- சல்மான் கான்
- நாசாவின் JWST கணக்கு
- NBA
- தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்தியா
- ஷான் மெண்டீஸ்
- WHO இன் சமூக ஊடகங்கள்
ஆகியவை அடங்கும்.
மிரட்டும் ஹேக்கர்
இவர்கள் மட்டுமின்றி இன்னும் பல உயர் சுயவிவர பயனர் தரவுகளை அதில் கொண்டுள்ளது. அதில் பல தரவுகள் வெளியே கசிவதால் பெரும் பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹேக்கர் தனது பதிவில், "ட்விட்டர் அல்லது எலோன் மஸ்க் இதைப் படிக்கும் பட்சத்தில் நீங்கள் ஏற்கனவே 5.4 மில்லியன் ஜிடிபிஆர் அபராதம் விதிக்கப்படும் அபாயத்தில் உள்ளீர்கள். 400 மில்லியன் பயனர்கள் மீறினால் அபராதம் விதிக்கப்படும். GDPR மீறலில் $276 மில்லியன் USD செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு இதுதான் உங்களுக்கு சிறந்த வழி, ஃபேஸ்புக் செய்தது போல (533 மில்லியன் பயனர்கள் ஸ்கிராப் செய்யப்பட்டதால்) இந்தத் தரவுகளை பிரத்தியேகமாக வாங்கிக்கொள்ள வேண்டும்." என்று மிரட்டி இருக்கிறார்.
என்னென்ன பிரச்சினைகள் வரும்?
இடைத்தரகர் மூலம் நடக்கும் ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாக ஹேக்கர் கூறுகிறார், "நீங்கள் வாங்கிய பிறகு நான் இதை நீக்குவேன், இந்தத் தரவுகள் மீண்டும் வேறு யாருக்கும் விற்கப்படாது. இதன் மூலம் நிறைய பிரபலங்கள் க்ரிப்டோ மோசடி, சிம் ஸ்வாப்பிங், ஃபிஷிங் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கினால் ட்விட்டரின் நம்பிக்கைத்தன்மை எப்படி குலையும் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அது ட்விட்டர் குறித்த உங்கள் எதிர்கால திட்டங்களை தூள் தூளாக்கிவிடும்" என்று கூறியுள்ளார். அச்சுறுத்தல் வந்துள்ள மற்ற நபர்கள் தரவை இன்னும் சரிபார்க்கவில்லை என்றாலும், அலோன் கல் தனது LinkedIN இடுகையில், "தரவு செல்லுபடியாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, அச்சுறுத்தல் வந்துள்ள நபர்களின் எந்த மின்னஞ்சல் / தொலைபேசியையும் பார்ப்பதற்கும் வாய்ப்புள்ளது. இது 2021 இல் பேஸ்புக்கிற்கு நிகழ்ந்தது போன்ற ஒன்றுதான், இதன் விளைவாக மெட்டாவிற்கு $275,000,000 அபராதம் விதிக்கப்பட்டது", என்றார்.