Twitter | இந்தியாவின் புதிய ஐடி விதிகளை ஏற்போம்..ஆனால்.. - ட்விட்டர் விளக்கம்
இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகளை ஏற்க உள்ளதாக ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 25ஆம் தேதி முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்தன. இதை முதலில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஏற்க மறுத்தன. பின்னர் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய விதிகளை ஏற்று கொள்வதாக கூறி மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனினும் ட்விட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். அதில் ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் புதிய விதிகளை ஏற்றுகொள்ளாததால் அதன்மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளித்துள்ளார். அதில், "நாங்கள் இந்தியாவில் உள்ள சட்டம் மற்றும் விதிகளை மதித்து நடக்க உள்ளோம். எனினும் எங்களுடைய தளத்தில் எப்போதும் வெளிப்படைத் தன்மை மற்றும் தனிநபர் உரிமை பாதுகாப்பு ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம். அத்துடன் எங்கள் தளத்தில் அனைவரும் கருத்து தெரிவிக்கும் கருத்து சுதந்திரமும் முறையாக கடைபிடிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே ஃபேஸ்புக்கும், வாட்ஸ் அப் நிறுவனங்கள் இந்த புதிய விதிகளை ஏற்று கொண்டுள்ளனர். இந்தச் சூழலில் தற்போது ட்விட்டரும் ஏற்றுக் கொள்ள உள்ளது. இதற்கு முன்பாக இந்தியாவின் புதிய விதிகளை ஏற்றுக் கொள்ள ட்விட்டர் மத்திய அரசிடம் மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டது என்ற செய்திகள் வெளியாகின. இந்தச் சூழலில் செய்தித் தொடர்பாளரின் தகவல் ட்விட்டர் நிறுவனத்தின் கருத்தை தெளிவுப்படுத்தியுள்ளது.
முன்னதாக ட்விட்டர் விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "ஒரு நாட்டில் நீங்கள் தொழில் செய்ய வேண்டும் என்றால் அந்த நாட்டில் உள்ள அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் பிற சட்டங்களையும் ஏற்று நடக்க வேண்டும். அப்படி மதிக்கவில்லை என்றால் நாட்டில் தொழில் செய்ய கூடாது. இந்தப் புதிய விதிகள் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது. அதை நாங்கள் தற்போது கேட்க தயாராக இல்லை.
ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் 9 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் வைத்துள்ளது. ஆகவே இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்பட மத்திய அரசின் விதிகளை ஏற்று நடக்க வேண்டும்.ட்விட்டர் நிறுவனம் நம் நாட்டின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்கவில்லை என்றால் அந்த விவகாரம் தொடர்பாக அரசு ஆலோசித்து ஒரு முடிவை எடுக்கும். அப்போது அரசு எடுக்கும் முடிவை ட்விட்டர் நிறுவனம் ஏற்று தான் ஆகவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: Twitter Spaces | லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு முதல் அரசியல் வரை : வரவேற்பை பெரும் ட்விட்டர் ஸ்பேசஸ்!