Elon Musk | 'டெலிட் பண்ணு.. பணம் தரேன்' - எலான் மஸ்க்கையே கலங்கடித்த 19 வயது இளைஞர்!!
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் ஸ்வீனி என்ற 19 வயது இளைஞர் எலான் மஸ்க் ஜெட் என்ற ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்து வருகிறார்.
ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் சுமார் 72 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்கள் இருக்கின்றனர். மேலும் தன் சமூக வலைத்தளங்களில் தன் ஃபாலோவர்களுடன் சரளமாக உரையாடும் வெகுசில பில்லியனர்களுள் எலான் மஸ்க்கும் ஒருவர். தன்னை ஈர்க்கும் ஒவ்வொரு விவகாரம் மீது எமோஜி, ஒரு லைன் பதிவு, மீம்கள் முதலானவற்றை அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அது போல நிறுவனம் சார்ந்த விவகாரங்களையும் அவ்வப்போது ட்விட்டரில் தட்டிவிட்டு வைரலாவார்.
பிஸினஸ் மூளை என்று எலான் மஸ்கை மறுக்காமல் குறிப்பிடலாம். நாமெல்லாம் இன்று வாழ்ந்துகொண்டிருந்தால் எலான் மஸ்கின் மூளை எதிர்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும். அவரின் சிந்தனையும், திட்டங்களும் எதிர்காலத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கும். டீசலையும், பெட்ரோலையும் ஊற்றி கார்கள் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் எலக்ட்ரிக், தானியங்கி என ட்ராக்கை மாற்றினார் எலான்.
இன்று எலக்ட்ரிக் கார்கள் பரவலாக ஓடத் தொடங்கி இருக்கிறது. அதேபோல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியிலும் எலான் களமிறங்கியுள்ளார். எதிர்காலத்தில் உதவிக்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ரோபோ தான் கைகொடுக்கும் எனக் கூறும் எலான், அப்படியான ரோபோவையும் உருவாக்கி வருகிறார். இப்படி எதை எடுத்தாலும் காசு பார்க்கும் எலானிடமே ஒரு இளைஞர் காசு பார்க்க திட்டமிட்டு எலான் மஸ்குக்கு குடச்சல் கொடுத்து வருகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் ஸ்வீனி என்ற 19 வயது இளைஞர் எலான் மஸ்க் ஜெட் என்ற ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்து வருகிறார். சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த பக்கத்தை பாலோ செய்கின்றனர். இந்த ட்விட்டர் பக்கம்தான் எலான் மஸ்குக்கு குடைச்சல் கொடுக்கிறது. அந்த ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்கின் பயண விவரங்களை அசால்டாக பதிவிடுகிறார் அந்த இளைஞர். போட் என்ற ஆடோமேட்டிக் சாப்ட்வேர் மூலம் இந்த அப்டேட்டை பொது வெளியில் பகிர்கிறார் அந்த இளைஞர். எலான் மஸ்க் இந்த விமானத்தில் புறப்படுகிறார்.. இவ்வளவு நேரம் பயணம்.. இத்தனை மணிக்கு தரை இறங்குவார் என அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு விடுகிறார்.
இது என்னடா தலைவலி என ஃபீல் செய்த எலான், அந்த குறிப்பிட்ட தகவல்களை டெலிட் செய்யுமாறும், 5000 டாலர்கள் தருவதாகவும் அந்த இளைஞரிடம் பேசியுள்ளார். ஆனால் தனக்கு 50ஆயிரம் டாலர்கள் வேண்டுமென்று பேரம் பேசியுள்ளார் ஜேக். அட போங்க தம்பி எனக் கூறிய எலான், ஜேக்கை அனைத்து சோஷியல் மீடியாவிலும் ப்ளாக் செய்துவிட்டு தன் வேலையை பார்க்க கிளம்பிவிட்டார். எலான் மட்டுமல்ல மைக்ரோசாப்ட் ஓனர், அமேசான் ஓனர் என அனைவரையும் இனி பின் தொடர்வேன் என்றும் அதன் மூலம் காசு பார்ப்பேன் என்றும் அடுத்த கியர் போட்டுள்ளார் ஜேக். இந்த பணத்தை வைத்து நான் கல்லூரிக்கு கட்டணம் செலுத்துவேன், யாருக்கேனும் உதவி செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார் அந்த இளைஞர்
யாரு சாமி இவன் என பிரபலங்களையே மிரட்டும் இளைஞரை இணைய உலகம் உற்றுப்பார்க்கத் தொடங்கியுள்ளது.