’அரை மணிநேரம் சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் பயணம்!’ - விரைவில் அறிமுகமாகும் Simple One எலக்ட்ரிக் பைக்!
பெங்களூருவின் Simple Energy நிறுவனத்தின் இருசக்கர மின்சார வாகனம் வரும் ஆகஸ்ட் 15 வெளியாகிறது. 'Simple One' என்று பெயரிடப்பட்டிருக்கும் இது, சுமார் 1.1 முதல் 1.2 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த சிம்பிள் எனர்ஜி (Simple Energy) நிறுவனத்தின் இரண்டு சக்கர மின்சார வாகனம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகவுள்ளது. 'Simple One' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வாகனத்தை வெளியிடப்படும் நாளில் இருந்து முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Simple One வாகனம் 4.8 kWH பேட்டரியைக் கொண்டது. இதன்மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தால் ஏறத்தாழ 240 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். மேலும், Simple Energy நிறுவனம் இந்தியா முழுவதும் ஏறத்தாழ 300 இடங்களில் சார்ஜ் செய்யும் மையங்களை அமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. Simple Loop என்றழைக்கப்படும் இந்த சார்ஜ் செய்யும் மையங்களில் ஒரு நிமிடத்திற்கு சார்ஜ் செய்தால் வாகனத்தை சுமார் இரண்டரை கிலோமீட்டர் வரை இயக்கலாம். அதாவது அரை மணி நேரம் சார்ஜ் செய்த பிறகு, 75 கிலோமீட்டர்கள் பயணிக்கலாம். Simple Loop சார்ஜிங் மையங்களில் அனைத்து விதமான மின்சார வாகனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம் எனவும், அதன்மூலம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க விரும்புவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Simple Energy நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுஹாஸ் ராஜ்குமார், “Simple One வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம். விரைவில் சார்ஜிங் மையங்களுக்கான கட்டிடப் பணிகள் தொடங்கவுள்ளோம். முதலில் இந்த வாகனத்திற்கு Mark 2 என்று பெயர் சூட்டினோம். ஆனால் தற்போது Simple என்ற பெயர் எங்கள் நோக்கத்தை வெளிப்படுத்தும் என்பதால் பெயர் மாற்றம் செய்தோம். ஆகஸ்ட் 15க்குப் பிறகு, இந்த வாகனம் வெளியிடப்படும். இந்தியா மின்சார வாகனங்களின் பாதையில் செல்லப் போவதைப் பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
சுமார் 1.1 முதல் 1.2 லட்சம் வரை விலை நிர்ணியம் செய்யப்பட்டிருக்கும் Simple One வாகனம், பூஜ்யத்தில் இருந்து மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தை சுமார் 3.5 வினாடிகளில் அடையக் கூடியது. மேலும், அதிகபட்சமாக மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கக் கூடியது. இதில் 7 இன்ச் ட்ச் ஸ்க்ரீன் வசதியும், அதில் மேப், ப்ளூடூத் முதலான வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு, சுஹாஸ் ராஜ்குமார் மற்றும் ஷ்ரேஷ்த் மிஸ்ரா ஆகியோர் தொடங்கிய Simple Energy நிறுவனம் தமிழ்நாட்டின் ஒசூரில் உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ஒசூரில் தொடங்கப்படும் தொழிற்சாலையில் முதல் கட்டமாக சுமார் 50 ஆயிரம் வாகனங்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டின் முடிவில், சுமார் 50 முதல் 74 கோடி ரூபாய் வரை வருவாயைப் பெருக்கத் திட்டமிட்டிருக்கும் இந்த நிறுவனம், முதற்கட்டமாக பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களிலும், அடுத்த படியாக, சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் தொழிற்சாலை துவங்கவுள்ளது.