Youtube Channel ban | ஒரு யூடியூப் சேனல் எதற்காகவெல்லாம் தடை செய்யப்படுகிறது தெரியுமா?
யூடியூப் நிறுவனம் ஒரு சேனலை முடக்கினால், அதனைப் பயன்படுத்தவோ, சொந்தம் கொண்டாடவோ, வேறு யூடியூப் சேனல்களை உருவாக்கவோ முடியாது. யூடியூப் சேனல் எதற்காகத் தடை செய்யப்படுகிறது, தெரியுமா?
யூடியூப் நிறுவனம் ஒரு சேனலை முடக்கினால், அதனைப் பயன்படுத்தவோ, சொந்தம் கொண்டாடவோ, வேறு யூடியூப் சேனல்களை உருவாக்கவோ முடியாது. ஒரு யூடியூப் சேனல் முடக்கப்பட்டால், அதற்கான காரணம் சேனலின் உரிமையாளருக்கு அனுப்பப்படும்.
இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்; ஒரு யூடியூப் சேனல் எதற்காகத் தடை செய்யப்படுகிறது, தெரியுமா?
பல்வேறு காரணங்களுக்காக யூடியூப் நிறுவனம் சேனல்களைத் தடை செய்கிறது. தொடர்ச்சியாக யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வழிகாட்டுதல் நெறிமுறைகளையோ, நிறுவனத்தின் சேவை விதிமுறைகளையோ தொடர்ந்து தங்கள் படைப்புகளின் மூலம் ஒரு சேனல் மீறினால் அது தடை செய்யப்படும். தொடர்ந்து ஒரே சேனல் மீது முறைகேடு குறித்து புகார்கள் எழுப்பப்பட்டால் அதுவும் தடை செய்யப்படும். யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றாமல் மீறிக் கொண்டிருக்கும் சேனல்களும் தடை செய்யப்படும்.
பிறரின் படைப்புகளை அனுமதியின்றி பயன்படுத்தினாலும், காப்பிரைட் காரணங்களுக்காகவும் யூடியூப் சேனல்கள் முடக்கப்படுகின்றன.
இந்தக் காரணங்கள் அனைத்தும் யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றாத சேனல்களே நீக்கப்படும் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன.
யூடியூப் நிறுவனம் Community Guidelines என்ற பெயரில் சமூக வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் யூடியூப் தளத்தில் பதிவிடப்படும் வீடியோ, கமெண்ட், லைக்ஸ், முகப்புப் படம் முதலான அனைத்திற்கும் பொருந்தும். மேலும், இவை யூடியூப் தளத்தில் எந்த வகையான படைப்புகள் இடம்பெறக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை யூடியூப் நிறுவனம் மனிதர்கள், செயற்கைத் தொழில்நுட்பம் ஆகிய இரு தரப்பின் மூலமாகவும் அமல்படுத்துகிறது. மேலும், இந்த நெறிமுறைகள் ஒரு சேனல் உரிமையாளரின் பின்னணி, அரசியல் நிலைப்பாடு, அதிகாரம் முதலான எந்த அடிப்படையிலும் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் பொதுவாக அமல்படுத்தப்பட்டிருப்பதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்பத்தின் மூலம் மோசடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் யூடியூப் சேனல் நீக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. போலியாக என்கேஜ்மெண்ட் பெறுவது, மற்றொருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்வது முதலானவை மேற்கொள்ளப்படக் கூடாது என யூடியூப் நிறுவனம் கூறுகிறது.
மேலும், குழந்தைகள் பாதுகாப்புக்கு எதிரான படைப்புகள், ஆபாசமான முகப்புப் படங்கள், நிர்வாணம் மற்றும் பாலியல் சார்ந்த படைப்புகள், தற்கொலையையோ தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதையோ ஊக்குவிப்பது, ஆபாசமாகப் பேசுவது முதலான காரணங்களுக்காக யூடியூப் சேனல்கள் தடை செய்யப்படுகின்றன.
இணையத்தில் மற்றொருவரைத் தாக்குவது, அபாயகரமான படைப்புகள், வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவது, வன்முறையை ஊக்குவிப்பது முதலான காரணங்களுக்காகவும், போலிச் செய்திகளைப் பரப்புவது, தேர்தல், கோவிட் பெருந்தொற்று முதலானவை குறித்து வதந்தி பரப்புவது ஆகிய காரணங்களுக்காகவும் யூடியூப் சேனல்கள் தடை செய்யப்படுகின்றன.
தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் யூடியூப் நிறுவனத்திடம் முறையிட்டு, படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்து மேல்முறையீடு செய்து தங்கள் விதிமீறலுக்கு ஏற்ப சேனல்களை மீட்டுக் கொள்ளும் வசதியையும் யூடியூப் நிறுவனம் அளிக்கிறது.