Popcorn TIme | வெளிநாட்டின் தமிழ்ராக்கர்ஸ்.. மூடப்படும் `பாப்கார்ன் டைம்’ இணையதளம்.. காரணம் என்ன தெரியுமா?
பாப்கார்ன் டைம் இணையதளம் கடந்த பல ஆண்டுகளாக இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் பார்வையாளர்களுக்கு வழங்கி வந்த நிலையில், தற்போது நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
பாப்கார்ன் டைம் இணையதளம் கடந்த பல ஆண்டுகளாக இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் பார்வையாளர்களுக்கு வழங்கி வந்த நிலையில், தற்போது நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் முதலான ஓடிடி தளங்களுக்குப் பெரிய போட்டியாகக் கருதப்பட்ட சட்டவிரோத தளமாக பாப்கார்ன் டைம் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதலே பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் தற்போது முழுமையாக மூடப்பட்டு, அதன் இணையதளத்தில் பெரிய `RIP' என்ற எழுத்துகள் எழுதப்பட்டு பார்வையாளர்களிடையே இந்தச் செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.
மகிழ்ச்சியான பாப்கார்ன் பக்கெட் என வடிவமைக்கப்பட்டிருக்கும் பாப்கார்ன் டைம் தளத்தின் லோகோ தற்போது இறந்து போனது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தின் காரணத்தை கூகுள் தேடல் தரவுகளின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளது பாப்கார்ன் டைம் தளத்தை உருவாக்கிய குழு.
கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கிய பாப்கார்ன் டைம் கடந்த ஆண்டுகளில் படிப்படியாக கூகுள் தேடலில் தேடப்படுவது குறைந்துள்ளது. 2015ஆம் ஆண்டு அதிகரித்த தேடல், 2016ஆம் ஆண்டு அத உச்சத்தை எட்டியுள்ளது. எனினும் தற்போது பெரியளவில் தேடப்படுவதில்லை என்பதால் பாப்கார்ன் டைம் மூடுவிழா கண்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பல்வேறு விதமான சட்டப்பூர்வ விவகாரங்களின் கீழ் பாப்கார்ன் டைம் சர்ச்சையில் சிக்கியது. திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் சட்டவிரோதமாக பார்வையிடும் வசதி இருந்ததால், அதனைத் தடை செய்ய பல்வேறு நாடுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு, பாப்கார்ன் டைம் இணையதளமாக செயல்படுவது தடுக்கப்பட்ட பிறகும், அது ஆப் வடிவில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
பாப்கார்ன் டைம் தளத்தில் சட்டவிரோதமாக திரைப்படங்கள் இலவசமாக திரையிடப்பட்டதால், நெட்ஃப்ளிக்ஸ் முதலான ஓடிடி தளங்கள் லாபத்தை இழக்கும் சூழல் இருந்தது. எனினும், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, பெரும்பாலான திரைப்படைப்பாளிகள் டிஜிட்டல் தளங்களில் தங்கள் படைப்புகளை வெளியிடத் தொடங்கினர்.
அதன்பிறகு நடந்த விவகாரங்கள் பாப்கார்ன் டைம் மூடுவதற்கான காரணங்களாக அமைந்துள்ளன. இந்தத் தளம் சட்டவிரோதமாக செயல்பட்டும் தடை செய்யப்படவில்லை. எனினும், நெட்ஃப்ளிக்ஸ் முதலான ஓடிடி நிறுவனங்கள் சாதாரண பயனாளர்களையும் இலவசமாக கிடைக்கும் தளங்களைப் பயன்படுத்தாமல் அதிகாரப்பூர்வ ஓடிடி தளங்களைப் பயன்படுத்த வைத்திருக்கின்றன.
ஓடிடி தளங்களைப் பயன்படுத்தும் கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதும் இதற்கு மிக முக்கிய காரணம். கடந்த மாதம் இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் தளம் அதன் கட்டணங்களைக் குறைத்தது. 149 ரூபாய் செலவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தைப் பய்ன்படுத்த முடியும். சட்டவிரோதமாகத் திரைப்படங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, சொற்ப கட்டணம் செலுத்தி ஓடிடி தளங்களைப் பயன்படுத்துவது சிறந்தது எனப் பலரும் எண்ணத் தொடங்கியிருப்பது இதன் பின்னணி காரணம்.
எனினும், உலகின் பெரிய ஓடிடி தளங்களின் பிரச்னை இன்னும் முடியவில்லை. பல்வேறு சட்டவிரோத தளங்கள் இன்னும் இலவசமாகப் படைப்புகளைப் பதிவிட்டு வருகின்றன. அவற்றை இந்த நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதை எதிர்காலங்களில் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.