Phonepe UPI Lite: இனி PIN நம்பர் இல்லாமலேயே பணம் செலுத்தலாம்... போன்பேயில் அசத்தல் அம்சம் அறிமுகம்...!
முக்கியமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனை ஆப்களில் ஒன்றான போன்பேவில் யுபிஐ லைட் (UPI Lite) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Phonepe UPI Lite : முக்கியமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனை ஆப்களில் ஒன்றான போன்பேவில் யுபிஐ லைட் (UPI Lite) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பணப்பரிமாற்றம்
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட பணப் பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது.
சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
யுபிஐ லைட்
இந்நிலையில், முக்கியமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனை ஆப்களில் ஒன்றான போன்பேவில் யுபிஐ லைட் (UPI Lite) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த யுபிஐ லைட் என்பது சிறிய அளவிலான பணப்பரிவர்த்தனைகளை விரைவாகவும் எளிதாகவும் நடத்த உதவும் ஒரு அம்சமாகும்.
இந்த யுபிஐ லைட் அம்சமானது பயனர்கள் அக்கவுண்ட் வைத்துள்ள வங்கிகளின் அமைப்புகளுடன் நேராக இணைக்கப்படாது. மாறாக யுபிஐ லைட் அக்கவுண்ட்டில் குறிப்பிட்ட அளவு பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு அதைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் வகையில் யுபிஐ லைட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அம்சம் அனைத்து முக்கிய வங்கிகளின் ஆதரவுடன் நாடு முழுவதும் உள்ள எந்தவொரு க்யூஆர் குறியீடுகள் வழியாகவே அல்லது நம்பர் வழியாகவோ பணம் செலுத்த, போன்பேவில் உள்ள யுபிஐ லைட்டை பயன்படுத்த முடியும். மேலும், போன்பே நிறுவனத்தின் கூற்றுப்படி, போன்பே ஆப்பில் உருவாக்கப்படும் யுபுஐ லைட் அக்கவுண்டில் ரூ.2,000 வரையிலான தொகையை சேர்க்க முடியும். ஒரு நேரத்தில் ரூ.200 அல்லது அதற்கு குறைவான தொகையை மட்டுமே செலுத்த முடியும்.
எனவே இந்த அம்சம் மூலம் சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை எளிதாக செய்து கொள்ள முடியும். ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன் பேடிஎம் (paytm) இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது போன்பே அறிமுகப்படுத்தியது.
போன்பே யுபிஐ லைட் பயன்படுத்துவது எப்படி?
- முதலில் உங்கள் போன்பே (Phonepe) செயலியை ஓபன் செய்யவும்.
- அடுத்து ஆப்பின் முகப்பு பக்கத்தில் யுபிஐ லைட் (UPI Lite) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு, யுபிஐ லைட் அக்கவுண்டில் தொகையை உள்ளிட்டு உங்கள் வங்கி கணக்கு விவரங்களை குறிப்பிடவும்.
- இதனை அடுத்து, யிபிஐ பின் நம்பரை உள்ளிட்டவுடன் உங்கள் யுபிஐ லைட் கணக்கு தொடங்கப்படும்.
குறிப்பாக உங்களிடம் உள்ள போன்பே செயலியை அப்டேட் செய்தால் மட்டுமே இந்த அம்சம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.