புதிய நோக்கியா 5 ஜி அப்டேட் இணையத்தில் லீக்
மொபைல் போன் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்பார்ப்புக்கு இடையே இணையத்தில் வெளியானது புதிய நோக்கிய எக்ஸ் 20 அப்டேட்.
எச்.எம்.டி., குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா எக்ஸ் 20 என்ற 5 ஜி ஸ்மார்ட் போனை உருவாக்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஒருகாலத்தில் அனைவர் கைகளிலும் தவழ்ந்த நோக்கியா போன் காலப்போக்கில் கடும் சரிவை சந்தித்தாலும், அந்த பிராண்ட் மீதான நம்பிக்கை இன்னும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கிறது. அதை பயன்படுத்தி 5ஜி யுகத்தில் மீண்டும் தனது பெயரை பதிக்க எச்.எம்.டி., நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு புதிய நோக்கியா 5 ஜி பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான எதிர்பார்ப்பு மொபைல் பயன்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், புதிய நோக்கியா 5ஜி ஸ்மார்ட் போன் குறித்த தகவல்கள், கீக் பென்ச் என்ற தளத்தில் வெளியாகியிருக்கிறது.
அதில் குறிப்பிட்டுள்ளபடி ஸ்னாப்டிராகன் 480 5ஜி புராசஸர் கொண்டிருக்கும் அந்த போன் விலை குறைவாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 128 ஜிபி மெமரி கொண்டதாக புதிய நோக்கியா எக்ஸ் 20 வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி 32 ஜிபி மெமரி கொண்ட நோக்கிய எக்ஸ் 10 ஸ்மார்ட் போனும் அதைத் தொடர்ந்து வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.