One Plus 12R: ஒன் பிளஸ் 12ஆர் மாடல் ஆனதா வீண்? ரிட்டர்ன் கொடுத்து பணத்தை வாங்கிக்கோங்க!
oneplus 12R Refund: ஒன் பிளஸ் 12 ஆர் மாடல் செல்போன்களை திருப்பிக் கொடுத்து பயனாளர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
oneplus 12R Refund: ஒன்பிளஸ் ஆர் மாடல் செல்போன்களை திருப்பிக் கொடுக்க, பயனாளர்களுக்கு மார்ச் 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
oneplus 12R அறிமுகமும், சர்ச்சையும்:
OnePlus நிறுவனம் தனது OnePlus 12R மாடல் செல்போன்களை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதில், 12R 256GB வெர்ஷன் ஆனது UFS 4.0 சேமிப்பகத்துடன் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பல பயனர்கள் அந்த வெர்ஷனின் குறைந்த வாசிப்பு மற்றும் எழுதும் வேகம் குறித்து புகார்களை எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஒன்பிளஸ் நிறுவனம், பிழையை ஒப்புக் கொண்டதோடு OnePlus 12R இன் அனைத்து வெர்ஷன்களும் UFS 3.1 சேமிப்பகத்துடன் மட்டுமே வருகின்றன என்பதை உறுதிப்படுத்தியது.
ஒன்பிளஸ் நிறுவனம் தந்த விளக்கம்:
ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்த விளக்கத்தில், "OnePlus 12R அறிமுகத்தின் போது, டிரினிட்டி இன்ஜின் என்ற புதிய மென்பொருள் அல்காரிதம்களை நாங்கள் அறிவித்தோம். இது உங்கள் ஃபோனின் நினைவகம் மற்றும் சேமிப்பகத்தை பல ஆண்டுகளாக வேகமாகவும் சீராகவும் வைத்திருக்க உதவும். ஒரு பிழையின் காரணமாக, டிரினிட்டி இன்ஜினால் மேம்படுத்தப்பட்ட சேமிப்பகம் சில வகைகளில் UFS 4.0 ஆக இருக்கும் என்று தெரிவித்தோம். OnePlus 12R இன் அனைத்து வகைகளிலும் உள்ள சேமிப்பகம் இன்னும் டிரினிட்டி இன்ஜினால் மேம்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் UFS 3.1 தான் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும்," என்று OnePlus நிறுவனம் தெரிவித்து இருந்தது.
”ஃபோனை கொடுத்து பணத்தை திரும்பப் பெறலாம்”
இந்த பிரச்னைகள் எல்லாவற்றிற்கும் முடிவாக OnePlus COO Kinder Liu Qu புதிய அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, 256GB சேமிப்பக வெர்ஷனை வாங்கியவர்கள் அதை திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். அதற்கு, மார்ச் 16 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, “உங்கள் பொறுமைக்கு நன்றி. எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழுக்கள் இப்போது நிலைமையைப் பற்றி முழுமையாக விளக்கி, கடந்த சில நாட்களாக பிரச்னைகளை தெரிவித்த நபர்களுக்கு உதவி செய்து வருவதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் OnePlus 12R 256GB மாறுபாட்டைப் பெற்றிருந்தால், உங்கள் தொலைபேசியில் உள்ள கோப்பு முறைமை வகையுடன் நிலைமையைப் பற்றி விவாதிக்க விரும்பினால், உங்கள் வழக்கமான முறையில் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள். மார்ச் 16, 2024 வரை பணத்தைத் திரும்பப் பெறுவது உட்பட அடுத்த படிகள் குறித்து அவர்களால் உங்களுடன் விவாதிப்பார்கள்.
OnePlus 12R எங்கள் சாதனங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதிக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இயங்குகிறது. நீங்கள் அதை பயன்படுத்தும்போது நீங்கள் அதை விரும்புவீர்கள் என்று நாங்கள் இன்னும் உறுதியாக நம்புகிறோம். ஆனால் உங்களுடன், எங்கள் சமூகத்துடனான எங்கள் உறவை நாங்கள் மதிக்கிறோம் என்பதையும், எங்கள் மீதான உங்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியது என்பதையும் எங்கள் விரைவான நடவடிக்கை காட்டுகிறது என்று நம்புகிறேன்” என விளக்கமளித்துள்ளார்.
வித்தியாசம் என்ன?
UFS 4.0 ஸ்டோரேஜ் அம்சமானது வேகமாக படிப்பது மற்றும் எழுதும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதேநேரம், UFS 3.1 சற்றே வேகம் குறைவானதாக இருப்பதோடு, பல்வேறும் மலிவு விலை ஸ்மார்ட் ஃபோன்கள், ஒன் பிளஸ் 11 சீரிஸ் உள்ளிட்ட மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட் ஃபோன்களிலும் கிடைக்கப் பெறுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை 45 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.