பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் ஸ்டோர்… ஆப்பிளின் பெரிய திட்டம்!
கடையின் தீம் கலர் பச்சையாக உள்ளது. விற்பனை குழு உறுப்பினர்களின் டி-ஷர்ட் வண்ணங்களில் (பச்சை) பிரதிபலிக்கிறது. வேலை செய்யும் ஊழியர்கள் பல்துறையில், அறிவாற்றல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான ஆப்பிள் ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஆரவாரங்களுக்கு மத்தியில், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இந்தியாவில் முதல் ஆப்பிள் பிசிக்கல் ரீடெய்ல் ஸ்டோரைத் திறந்துள்ளார்.
இந்தியாவில் ஆப்பிளின் முதல் ஸ்டோர்
நேற்று மதியம் முதல், மும்பையில் உள்ள, பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் அமைந்துள்ள ஸ்டோரில் ஆப்பிள் தயாரிப்புகளை வாங்க முடியும். இந்திய சந்தையில் அதன் ஆஃப்லைன் இருப்பை அதிகரிக்கவும், அதன் நெருங்கிய போட்டியாளரான சாம்சங்கை வீழ்த்தவும், ஆப்பிளின் முக்கியப் படியாக இந்தக் கடை உள்ளது. Apple BKC ஸ்டோர் திறப்பு விழாவில் கிட்டத்தட்ட 5000 தொழில்நுட்ப ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் - அவர்களில் சிலர் காலை 8 மணிக்கே அந்த இடத்திற்கு வந்திருந்தனர் - கதவுகள் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு முன்பே வந்து காத்திருந்தனர். திங்களன்று ஆப்பிள் ஸ்டோரின் சிறப்பு முன்னோட்டத்தை நடத்தியது, அங்கு ஒரு சில ஊடக வல்லுநர்களுக்கு கடையை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஷாப்பிங் அனுபவம்
ஷாப்பிங் அனுபவத்திற்கு என்று இந்த கடையில் ஒரு தனித்துவமான அணுகுமுறை உள்ளது. கண்ணாடி சுவர்கள் வழியாக சூரிய ஒளி போதுமான அளவு வருகிறது. நிறுவனத்தின் சுற்றுச்சூழல் அணுகுமுறைக்கு ஏற்ப, உள்ளே செடிகள் வைக்கப்பட்டுள்ளன. கார்பன் நியூட்ரல் மற்றும் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் வேலை செய்யும் நிலையான கடைகளில் இதுவும் ஒன்று என்று ஆப்பிள் கூறுகிறது. கடையின் தீம் கலர் பச்சையாக உள்ளது. விற்பனை குழு உறுப்பினர்களின் டி-ஷர்ட் வண்ணங்களில் (பச்சை) பிரதிபலிக்கிறது. வேலை செய்யும் ஊழியர்கள் பல்துறையில், அறிவாற்றல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
உள் கட்டமைப்பு எப்படி?
BKC ஸ்டோரில் உள்ள 100 உறுப்பினர்களைக் கொண்ட குழு 20 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் வல்லமையுடன் இருக்கிறது. ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்பையும் புரிந்துகொள்வது மற்றும் விரும்பிய தொழில்நுட்பங்கள் மூலம் பார்வையாளர்களை வழிநடத்தும் திறன் கொண்ட குழுவாக உள்ளது. கடையின் அடிப்படை வடிவமைப்பு தத்துவம் உலகெங்கிலும் உள்ள மற்ற ஆப்பிள் ஸ்டோர்களைப் போலவே இருந்தாலும், அந்நிறுவனம் அதற்கு ஒரு இந்தியத் தொடர்பைச் சேர்த்துள்ளது. கடையின் மேற்பரப்பு கைவினைகளால் செய்யப்பட்ட மரத்தால் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து 4,50,000 மர கூறுகள் இதற்காக வந்துள்ளன. கடைக்குள் நுழைந்தவுடன், 14 மீட்டர் நீளமுள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் படிக்கட்டுகள் மற்றும் இரண்டு சாம்பல் கல் சுவர்கள் உள்ளன. இவை அனைத்தும் ராஜஸ்தானில் இருந்து வந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் திட்டம்
மேக்புக்ஸ், ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் வாட்ச்கள் - இந்தியாவில் தற்போது கிடைக்கும் ஆப்பிள் தயாரிப்புகள் அனைத்தையும் இந்தக் கடை விற்பனை செய்யும். இதனுடன், இது ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் ஹோம் பாட், ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி+ ஆகியவற்றைக் காட்டுகிறது. கடையின் முதல் தளத்தில் பார்வையாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஜீனியஸ் பார் ஒன்றும் உள்ளது. இந்தியாவில் அதன் தடத்தை வலுப்படுத்துவதில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பெரிய படியாக இந்த கடையின் திறப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆப்பிள் இந்திய சந்தையை உன்னிப்பாகக் கண்காணித்து வேலை செய்து வருகிறது. அவற்றில் சில, நடந்து வரும் அமெரிக்க-சீனா பதட்டங்களுக்கு மத்தியில் சீனாவிற்கு வெளியே உற்பத்தியை பல்வகைப்படுத்த ஆப்பிள் நிறுவனத்தின் சீனா-பிளஸ்-ஒன் மூலோபாயத்தின் விளைவாகும். 2017 இல் இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது, மேலும் கடந்த ஆண்டு முதல் சமீபத்திய ஐபோன் மாடல்களை அசெம்பிள் செய்து வருகிறது. ஆப்பிள் பிகேசி நாட்டிலேயே முதல் ஆப்பிள் ஸ்டோர் ஆகும். மற்றொன்று வரும் 20 ஆம் தேதி அன்று டெல்லியில் திறக்கப்படுகிறது.