iPhone 15 series: வரப்போது ஆப்பிளின் ஐபோன் 15 சீரிஸ்.. செப்டம்பர் 13ம் தேதி அறிமுக நிகழ்ச்சி? விலை என்ன தெரியுமா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் வெளியீட்டு நிகழ்ச்சி செப்டம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் வெளியீட்டு நிகழ்ச்சி செப்டம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபோன் சீரிஸ்:
ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளமாக இருப்பது ஐபோன். ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்பட்ட மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஐபோன் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் வெளியான ஐபோன்-X வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து வெளியான ஐபோன் சீரிஸ்11, 12 ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேநேரம், ஐபோன் சீரிஸ் 13 மற்றும் 14 மாடல்கள் முந்தைய இரண்டு மாடல்களை விட கூடுதலான கவனத்தை பெற்றது. இந்நிலையில் தான், ஐபோன் 15 சீரிஸ் வெளியாக உள்ள தேதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ஐபோன் 15 சீரிஸ் வெளியீடு எப்போது?
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஐபோன் 15 சீரிஸின் வெளியீட்டு நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 12 அல்லது 13ம் தேதிகளில் நடைபெறும் என கூறப்படுகிறது. அது உண்மையாகும் பட்சத்தில், செப்டம்பர் 15ம் தேதி முன்பதிவும், பின்பு 22ம் தேதி நேரடி விற்பனையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச்கள் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 ஆகிய மாடல்கள் இடம்பெற உள்ளன. அதோடு, ஐஓஎஸ் 17 தொடர்பான தகவல்கள் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்புகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அம்சங்கள் என்ன?
நிகழ்ச்சி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், தேதி உறுதியான பிறகு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஊடகவியலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவது வழக்கம். இதனிடையே, அப்பிள் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடலில் CMOS எனப்படும் இமேஜ் சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதேநேரம், இது ப்ரோ மாடல்களில் இருக்க வாய்ப்பில்லை. அதேநேரம், ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 நிலையான மாடல்களில் 48MP Sony IMX803 இமேஜ் சென்சார் இடம்பெறக்கூடும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய 12MP கேமராவில் இருந்து பெரிய மேம்பாடாக இருக்கும்.
இந்தியாவில் விற்பனை நிலையங்கள்:
ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் கிடைத்தாலும், அதன் நேரடி விற்பனை நிலையங்கள் கடந்த ஏப்ரல் மாதம் தான் இந்தியாவில் தொடங்கப்பட்டது. அதில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று டெல்லியிலும் அமைந்துள்ளன. இதன் மூலம், புதியதாக அறிமுகமாக உள்ள ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் மாடல் போன்களும், ஆப்பிள் நிறுவனத்தால் இந்தியாவில் நேரடியாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 15-ன் தொடக்க விலை இந்திய சந்தையில் 78 ஆயிரம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.