Facebook Shares Drop: பயனாளர்களும் மதிப்பும் இழப்பு... அடுத்தடுத்து அடி வாங்கும் ஃபேஸ்புக் நிறுவனம்...! டிக்டாக்தான் காரணமாம்!
மெட்டா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 20 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
உலகில் மிகவும் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று மெட்டா. உலக அளவில் டிஜிட்டல் விளம்பரங்கள் செய்ய கூகுள் நிறுவனத்திற்கு பிறகு இரண்டாவது இடத்தில் மெட்டா நிறுவனம் உள்ளது. மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் உலகம் முழுவதும் பல பயனாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் 18ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ஃபேஸ்புக்கின் பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை 1.929 பில்லியனாக குறைந்துள்ளது. இது கடந்த காலாண்டில் இருந்த 1.930 பில்லியன் பயனாளர்களைவிட மிகவும் குறைவான ஒன்று. மேலும் ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டாவின் பங்குகளின் மதிப்பும் 20 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
மேலும் படிக்க:'டெலிட் பண்ணு.. பணம் தரேன்' - எலான் மஸ்க்கையே கலங்கடித்த 19 வயது இளைஞர்!!
இதுதொடர்பாக மெட்டா நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஆப்பிள் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கை மற்றும் டிக்டாக் நிறுவனத்தின் வளர்ச்சி ஆகியவை மெட்டாவின் பங்குகள் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின்புதிய தனியுரிமை கொள்கைக்கு பிறகு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்கள் சரியாக டார்கெட் செய்ய முடியவில்லை ” எனக் குற்றம்சாட்டியுள்ளது.
ஃபேஸ்புக் வலைதளத்திற்கு கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 2.91 மில்லியன் பயனாளர்கள் இருந்தனர். தற்போது அதைவிட இந்தாண்டின் கடைசி காலாண்டில் பயனாளர்கள் குறையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மெட்டா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 20 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. அதன்படி மெட்டா நிறுவனத்தின் மொத்த மதிப்பும் சுமார் 200 பில்லியன் டாலர் வரை குறைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இவை தவிர ஃபேஸ்புக் தளத்திற்கு போட்டியாக உள்ள டிக்டாக் நிறுவனத்தின் பயனாளர்கள் மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றனர். இதன்காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கடும் போட்டி அதிகரித்து வருகிறது. அத்துடன் அதனுடைய பங்குகளிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. மெட்டா நிறுவனத்தின் பெரும்பாலான வருமானம் டிஜிட்டல் விளம்பரங்கள் மூலம் வருகிறது. கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த வருமானம் 33.7 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு கணிக்கப்பட்ட 33.25 பில்லியன் டாலரைவிட அதிகமாக இருந்தது. இந்தச் சூழலில் இந்தாண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் டிஜிட்டல் விளம்பரம் மூலம் வரும் வருமானம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மெட்டாவெர்ஸ் உலகில் பாலியல் வன்கொடுமை.. தொடங்கியது புது பிரச்னை! விழிபிதுங்கும் மார்க்!