ABP EXCLUSIVE: வியர்வையில் சார்ஜ் ஆகும் பேட்டரி - தமிழ் விஞ்ஞானி குருநாதனுடன் நேர்காணல் (பகுதி - 2)
"பதவியில் இருந்து ஒய்வுபெற்றாலும் தன் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க துடிக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு நாட்டின் கல்வி மற்றும் கண்டிபிடிப்பு திறனை எப்படி வளர்க்கமுடியும்?"
கரூர் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி குருநாதன் தங்கவேல், லீ பூய், லியூ ஜியான் ஆகியோரின் மூவர் குழு சிங்கப்பூரில் மனித வியர்வையிலிருந்து சார்ஜ் ஆகும் பேட்டரியை கண்டிபிடித்து வெற்றிகரமாக இயக்கி சாதித்து உள்ளனர்.
இது குறித்து நமது ஏபிபி நாடு செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு விஞ்ஞானி குருநாதன் தங்கவேலு அளித்த பேட்டியின் முதல் பாகத்தை நேற்று வெளியிட்டோம். இதன் 2-வது பாகம் இதோ…
செய்தியாளர்: இந்த பேட்டரியின் இயங்குமுறை குறித்து சுருக்கமாக சொல்லுங்கள்?
எங்கள் பேட்டரி வெள்ளி ஆக்சைடை நேர்மறை மின்முனையாகவும், துத்தநாகத்தை எதிர்மறை மின்முனையாகவும், நீட்டக்கூடிய வெள்ளியை கலெக்டராகவும் பயன்படுத்துகிறது. முழு பேட்டரியும் வியர்வையை உறிஞ்சும் துணியில் அச்சிடப்பட்டுள்ளது. வியர்வை பேட்டரியைத் தொடும்போது, அது இரண்டு செயல்பாடுகளைச் செய்கிறது: முதலில், நேர்மறை மற்றும் எதிர்மறை மின்முனைகள் பேட்டரியின் எதிர்வினைக்கு உட்படும். குறிப்பாக, துத்தநாக எதிர்மறை மின்முனை எலக்ட்ரான்களை இழந்து பின்னர் சுமை மூலம் சில்வர் ஆக்சைடு நேர்மறை மின்முனைக்கு மாற்றப்பட்டு பேட்டரி எதிர்வினையை நிறைவு செய்யும்.
இரண்டாவது, வியர்வை தற்போதைய கலெக்டரின் எதிர்ப்பைக் குறைக்க வெள்ளி மின்னோட்ட சேகரிப்பாளருடன் வினைபுரியும். இதனால் பேட்டரியால் உருவாக்கப்படும் எலக்ட்ரான்கள் பேட்டரியை இழுக்கும்போது பேட்டரியின் நிலையான செயல்பாட்டை உறுதி செய்கிறது. எங்கள் வடிவமைப்பில், வியர்வையை உறிஞ்சும் துணியை அடித்தளமாக பயன்படுத்துகிறோம். உற்பத்தியாகும் வியர்வை பேட்டரியில் சேமிக்கப்படுவதை இந்த துணி உறுதி செய்கிறது. வியர்வையின் வேகம் மாறினாலும் அல்லது வியர்வை நின்றாலும் சிக்கல் எழாது.
செய்தியாளர்: நம் அன்றாட வாழ்வில் எந்த அளவுக்கு இந்த பேட்டரி பயனளிக்கும் என்று கருதுகிறீர்கள்?
எங்கள் பேட்டரி துணியால் ஆனது, எனவே அதை நேரடியாக பயனர் அணியலாம். இதன் தற்போதைய திறன் சதுர சென்டிமீட்டருக்கு 4 mAh ஆகும். ஸ்மார்ட் வாட்சின் பேட்டரி திறன் 300-500 mAh ஆகும். இந்த பேட்டரியை நேரடியாக கையில் அணிந்து சார்ஜ் செய்யலாம். துணியில் நாங்கள் உருவாக்கிய வியர்வை பேட்டரி மிகவும் மென்மையானது.
மனித தோலுடன் நன்றாகப் பொருந்தும் வசதி கொண்டது. இதை மற்ற சென்சார்களுடன் நன்றாக ஒருங்கிணைக்க முடியும். இரண்டாவதாக, வியர்வை எலக்ட்ரோலைட்டாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரியின் நிலைத்தன்மையையும் சிறப்பாக இருப்பதை எங்கள் சோதனையில் கண்டறிந்தோம்.
செய்தியாளர்: இந்த பேட்டரிக்கான ஆய்வுப்பணிகள், சோதனை பயன்பாடுகள் நிறைவடைந்துவிட்டதா?
பேட்டரி செயல்திறன் மற்றும் ஆரோக்கிய நிலையை அளவிடுவதற்கான சோதனை நிறைவடை உள்ளது. எங்கள் தொடர்ச்சியான ஆய்வுப்பணிகள் மற்றும் வளர்ச்சியின் மூலம், தொழில்நுட்பம் அணியக்கூடிய பேட்டரிகளுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.
செய்தியாளர்: அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் நன்மைகள் பல இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கோ, உடல்நலனுக்கோ தீங்கு ஏற்படுத்தும் சில அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. அதுபோல் உங்களின் இந்த கண்டுபிடிப்பில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா?
வியர்வை பேட்டரி நச்சுத்தன்மையற்றது மற்றும் பாதிப்பில்லாதது, எனவே பேட்டரி பாதுகாப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த பேட்டரியில் பாதரசம் போன்ற தீங்கு விளைவிக்கும் உலோகக் கூறுகள் இல்லை, மேலும் கரிம எலக்ட்ரோலைட்டுகளை நாம் பயன்படுத்துவதில்லை.
செய்தியாளர்: இது எப்போது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்?
பேட்டரி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், வணிகமயமாக்கலுக்கான திட்டங்களுக்காகவும் மேலும் மேம்பாடுகள் செய்ய இன்னும் வருடம் ஆகலாம். மனித வியர்வையில் சார்ஜ் ஆகும் பேட்டரியை மற்ற பயன்பாடுகளுக்கு விரிவுபடுத்துவோம். சில்வர் ஆக்சைடை தேர்வு செய்வதன் மூலம் முழு பேட்டரிக்கான மூலப்பொருட்களின் விலையை குறைக்க முடியும்.
செய்தியாளர்: முற்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கிய இந்தியாவிடம் இருந்து தற்போது கண்டுபிடிப்புகளை பார்க்க முடிவதில்லையே ஏன்?
பதவியில் இருந்து ஒய்வுபெற்றாலும் தன் அடுத்த பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க துடிக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு நாட்டின் கல்வி மற்றும் கண்டிபிடிப்பு திறனை எப்படி வளர்க்கமுடியும்? அதற்குறிய உள்கட்டமைப்பு வசதி இங்கு இருக்கிறது. ஆனால் அது திறமையானவரிடம் சென்று சேர்வது இல்லை. இந்த அமைப்பு சீக்கிரம் மாற வேண்டும். என்னை போன்ற எளிய மாணவர்கள் பயன்பெற வேண்டும்.
செய்தியாளர்: ஊடகங்களில் வெளியான செய்திகளை தவிர்த்து உங்கள் கண்டுபிடிப்புக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என எதை நினைக்கிறீர்கள்? ஏதாவது பெரிய நிறுவனங்கள் இதுகுறித்து கேட்டிருக்கிறார்களா?
எங்களது கண்டுபிடிப்பை பார்த்த MICRON, Huawei போன்ற பல சர்வதேச நிறுவனங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருகின்றன. பல நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. சிங்கப்பூர் அரசும் பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்குகிறது.
செய்தியாளர்: இந்தியாவிலிருந்து அறிவியல் கண்டுபிடிப்புகள் கிடைக்க என்ன மாதிரியான வசதிகள் தேவைப்படுகிறது. விஞ்ஞானியான நீங்கள் அரசுகளிடம் முன்வைக்கும் கோரிக்கை என்ன?
அறிவியல் ஆராய்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும். இளைய தலைமுறையினர் இதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
செய்தியாளர்: தமிழ்நாட்டில் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானியாக உயர்ந்து நிற்கும் நீங்கள், அறிவியல் துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு கூறும் அறிவுரை என்ன?
ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை, என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். நான் மாணவனாக இருந்தபோது கிடைக்காத பல வசதிகள் இப்போது உள்ள மாணவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
கையில் உள்ள மொபைல் போன் மூலம் ஒரு நொடியில் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கின்றனர். எந்தத் தகவலை வேண்டுமானாலும் உடனடியாக இணையதளம் வாயிலாகப் பெற முடிகிறது. அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு தேவையான விபரங்களை மற்றும் கருத்துக்களை தரக்கூடியவர்களாக இருந்தார்கள்
மாணவர்களின் கல்வி, ஆசிரியரை மட்டுமே சார்ந்த கல்வியாக இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் ஆசிரியரை மட்டும் சார்ந்து இருக்காமல் இணையதளம் வாயிலாக மாணவர்கள் பல அரிய விபரங்களைத் தெரிந்து கொள்கின்றனர்.
இப்பொழுது உள்ள தலைமுறையினர், நமது கலாச்சாரம் மற்றும் தமிழ்ப்பண்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளாமல் மேலை நாட்டுக் கலாச்சார மோகத்தில் மனித உறவுகளின் தேவைகளை உணராமல் உள்ளனர். கல்வி என்பது வேலை பெறுவதற்கு மட்டுமே என்ற குறுகிய நோக்கோடு பயணிக்காமல் நற்பண்புகளைக் கற்றுக் கொள்வதோடு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாடப்புத்தகங்களைத் தாண்டி நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்ளும் வகையிலும், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், அவர்கள் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி".