Battle Ground Pubg: 'கவனம்.. பஞ்சாயத்துனா தடை தான்' பேட்டில்கிரவுண்ட் கேள்விக்கு ஆர்டிஐ பதில்!
இந்தியாவில் எந்த ஒரு செயலியையும் அறிமுகம் செய்ய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அனுமதி தேவை இல்லை
பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வேறு பெயருடன் களம் இறங்கியது பப்ஜி. கடந்த மாதம் பப்ஜியின் இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம் செய்தது . புதிய பெயருடன் முன்பதிவை தொடங்கிய Battlegrounds Mobile India கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறங்கியது. ஒருமாதமாக ரிலீஸ் தேதி எப்போது என அறிவிக்கப்படாத நிலையில் புதிய அறிவிப்புகள், பரிசுகள், டீசர்கள் என களைகட்டியது சோஷியல் மீடியா. இந்நிலையில் பேட்டில்கிரவுண்ட் அதிகாரபூர்வமாக களம் இறங்கியது.
கேம் விளையாடும் ஒவ்வொரு முறையும் ஓடிபி எண்ணை பயன்படுத்தி மட்டுமே உள்ளே நுழைய முடியும், ஒருவர் தனது பெயரில் 10 அக்கவுண்ட் வைத்துக்கொள்ளலாம்,ஒரு நாளைக்கு 10 முறை மட்டுமே ஓடிபிக்காக விண்ணப்பிக்கலாம் என்ற புதிய முறையெல்லாம் கொண்டு வரப்பட்டுள்ளது. லாக்டவுன் காலத்தில் கேம் பிரியர்களுக்கு கொண்டாட்டமாகவே வந்துள்ளது பேட்டில்கிரவுண்ட். ஆனால் பல பிரச்னைகளால் வெளியே தூக்கி வீசப்பட்ட பப்ஜி, பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் வந்துவிட்டதே எனக் கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.
இந்த நிலையில் கவுரவ் தியாகி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். பேட்டில்கிரவுண்ட் இந்தியாவில் நுழைந்ததற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுமதி அளித்ததா என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சகம், இந்தியாவில் எந்த ஒரு செயலியையும் அறிமுகம் செய்ய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அனுமதி தேவை இல்லை. ஆனால் எந்த ஒரு செயலியையும் தடை செய்யும் உரிமை அமைச்சகத்துக்கு உண்டு என்று தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்றாலோ தடை செய்ய அனைத்து உரிமையும் உண்டு என்று விதிகள் தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் ஏதேனும் சர்ச்சைகளை மீண்டும் கொண்டு வந்தால் பேட்டில்கிரவுண்ட் செயலியும் நிச்சயம் தடை செய்ய 100% வாய்ப்பு உள்ளது என்றே தெரிகிறது.
தன்னுடைய ஆர்டிஐ குறித்து ட்வீட் செய்துள்ள கவுரவ், ஆர்டியை பதிலின்படி பார்த்தால் தடை செய்யப்பட்ட பப்ஜி வேறு பெயரில் மீண்டும் வந்துவிட்டது. இதற்கு அனுமதி தேவையில்லை. அப்படியானால் டிக் டாக், வீசாட் போன்ற செயலியும் பெயரை மாற்றி உள்ளே வர வாய்ப்புள்ளதே என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு பதிலளித்துள்ள சிலர் டிக் டாக், வீ சாட் தடை சீனாவின் செயலி என்பதால் செய்யப்பட்ட ஒன்று, தற்போது வந்துள்ள பேட்டில்கிரவுண்ட் கொரியாவின் நிறுவனம். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளதை புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த ஒரு செயலியாக இருந்தாலும் சத்தமில்லாமல் வந்து இருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. ஏதேனும் பஞ்சாயத்து என்றால் தூக்கி வெளியே வீச அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என அழுத்திச் சொல்லியுள்ளது மத்திய அரசு.