Google | புகாரளித்த இந்தியர்கள்.. ஒரே மாதத்தில் 93,550 தகவல்களை நீக்கிய கூகுள்!
இந்தியாவில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி கொண்டு வரப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் இந்த தகவல்களை அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியாவில் மட்டும் பயனர்கள் அளித்த 35,191 புகாரை தொடர்ந்து 93,550 தகவல்களை நீக்கி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. பயனர்கள் புகாரளிக்காமல் சுயபரிசோதனை வசதியின் மூலம் மட்டும் 6.51 லட்சம் தகவல்களை நீக்கி இருப்பதாக கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதே போல், ஜூலை மாதம் 36,934 புகார்கள் பயனர்களிடம் பெறப்பட்டு இருப்பதாகவும் அதன் மூலம் 95,680 தகவல்களை நீக்கி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது. சுயபரிசோதனை வசதியின் மூலமாக ஜூலை மாதத்தில் 5.78 லட்சம் தகவல்களை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
இந்தியாவில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி கொண்டு வரப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் இந்த தகவல்களை அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
பல்வேறு இணையதளங்களில், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு கூகுள் தேடுபொறியில் காண்பிக்கப்படும் தகவல்கள் நாட்டின் சட்டத்துக்கு புறம்பாக இருந்தாலோ, தனிநபர் உரிமையை மீறும் வகையில் இருந்தாலோ, வதந்தியாக இருந்தாலோ, கூகுள் நிறுவனம் வகுத்து உள்ள விதிகளுக்கு உட்படாமல் இருந்தாலோ புகாரின் அடிப்படையில் அல்லது சுயபரிசோதனை வசதியின் அடிப்படையில் நீக்கப்படும்.
அறிவுசார் சொத்துரிமையை மீறும் வகையில் இருக்கும் தகவல்கள் மீதான புகார்கள், தனி நபர், நிறுவனம், அமைப்பு, அரசு மீது அவதூறு பரப்பும் வகையிலான தகவல்களை மிகவும் கவனத்துடன் அணுகி அவற்றை நீக்கி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆகஸ்டு மாதம் நீக்கப்பட்டதில் 92,750 தகவல்கள் பதிப்புரிமை தொடர்பானவை. முத்திரை விதிகளை மீறிய 721 பதிவுகள், 32 போலி தகவல்கள், 12 தகவல்கள் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், பாலியல் ரீதியான 12 தகவல்களையும், இதர சட்ட காரணங்களுக்காக 4 தகவல்களை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
கூகுள் நிறுவனம் தவறான, விஷமத்தனமான தகவல்களை நீக்குவதில் பெரும் தொகையை செலவிட்டு வருவதாக கூறியுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பயங்கரவாதத்தை பரப்பும் தகவல்கள், வன்முறையை தூண்டும் பதிவுகளை தாமாகவே கண்டறிந்து நீக்கும் தொழில்நுட்பத்தை வைத்திருப்பதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது.
கூகுளின் இந்த ஆட்டோமேட்டிக் வசதி விதிகளுக்கு முரணான தகவல்களை உடனடியாக கண்டுபிடித்து நீக்கும் என்றும், அதை பரப்புபவர் தொடர்ந்து கூகுளின் சேவைகளை பயன்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பயனாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை சமமாக கருதுவதாக தெரிவித்து உள்ள கூகுள் நிறுவனம், அனைத்து வயதினருக்கும் பொருந்தாத தகவல்கள் போன்ற தங்கள் விதிகளுக்கு முரணான பல தகவல்களை தொடர்ந்து அகற்றி வருவதாக விளக்கமளித்து உள்ளது.