International Womens Day 2022 | சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாட்டம்.. சூப்பர் டூடுலை வெளியிட்ட கூகுள்
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் பெண்கள் தங்கள் வாழ்நாளில் பல்வேறு பணிகளில் ஈடுபடுவதைக் கொண்டாடும் விதமாக டூடுள் ஒன்றை அதன் லோகோவில் வெளியிட்டுள்ளது.
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் பெண்கள் தங்கள் வாழ்நாளில் தாய் முதல் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் வரையிலான பணிகளில் ஈடுபடுவதைக் கொண்டாடும் விதமாக டூடுள் ஒன்றை அதன் லோகோவில் வெளியிட்டுள்ளது.
பல்வேறு கலாச்சாரங்களில் இருந்து பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக இன்று கூகுள் வெளியிட்டுள்ள டூடுளில் பெண்கள் நம் அன்றாட வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளைப் பதிவு செய்துள்ளது. தன் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டே லேப்டாப்பில் பணியாற்றும் தாய், செவிலியர், தோட்டக் கலைஞர், தன் மகளுக்குக் கற்றுக் கொடுக்கும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் எனப் பல்வேறு பணிகள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
கலை இயக்குநர் தோகா மேரும், அவருடைய பெண்கள் குழுவினராலும் இந்த டூடுள் உருவாக்கப்பட்டுள்ளது. தான் உருவாக்கியுள்ள டூடுள் மூலம் பெண்கள் தாங்கள் கவனிக்கப்படுவதையும், தாங்கள் செய்தவற்றிற்கும், செய்து கொண்டிருப்பவற்றிற்கும் மதிப்பு கொண்டிருப்பதையும் உணர வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார் கலை இயக்குநர் தோகா மேர். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பெண்கள் அதிகளவில் கடினங்களை எதிர்கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள தோகா மேர், `சமீபத்திய இரண்டு ஆண்டுகளில் பெண்கள் தங்கள் கவனத்தை மாற்றுவது, முன்னுரிமைகளை மாற்றிக் கொள்வது, தியாகம் செய்வது எனத் தன் தேவை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்ப மாறிக் கொண்டிருக்கின்றனர்’ எனக் கூறியுள்ளார்.
View this post on Instagram
தொடர்ந்து அவர், `வீட்டில் இருக்கு தாய் தன் குழந்தைகளைத் தனது மொத்த உலகமாக மாற்றுகிறார். ஒரு தலைமை நிர்வாக அதிகாரி தொடர்ந்து புதுமைகளை மேற்கொண்டு, தனது பணியாளர்களை ஊக்குவித்து, மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்கிறார். ஒரு கலைஞர் தன் கலையின் மூலமாக விடுதலையை வெளிப்படுத்துகிறார். வாகனங்களை இயக்குவது, பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவது, பள்ளிக்குச் செல்வது, உணவு சமைப்பது என நாம் எழுந்து கொள்ளும் ஒவ்வொரு காலையிலும் நமக்கான நோக்கம் ஒன்று இருக்கிறது. அது சிறியதோ, பெரியதோ, அது மட்டுமே முக்கியமானது’ என்கிறார்.
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய மகளிர் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை சார்பில், `நாளை நிலையான உலகத்திற்காக இன்றைய பாலின சமத்துவம்’ என்ற அடிப்படையின் கீழ் கொண்டாடப்பட்டு வருகிறது.