Google Bard Chatbot: எனக்காடா எண்ட் கார்ட் போடுறீங்க! சாட் ஜிபிடிக்கு நேரடியாக சவால் விடும் கூகுளின் ”பார்ட்”
Google Bard AI: கூகுள் நிறுவனத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான, பார்ட் எனும் சாட்பாட் சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
சாட் ஜிபிடி(ChatGPT)
நமது அன்றட வாழ்வில் விடை தெரியாத எந்த ஒரு கேள்வியை நாம் எதிர்கொண்டாலும், அதற்கான விடையை தேடி நாம் செல்லும் முதல் இடம் கூகுள். ஏன் என்றால் கூகுளில் கிடைக்காத பதில்களும் இல்லை, தகவல்களும் இல்லை என்ற மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. ஆனால், அதற்கே சவால் விடும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், OpenAI எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு அறிமுகமானது தான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி. பொதுவாக நாம் ஒரு விஷயம் குறித்து கூகுளில் தேடினால், அதுதொடர்பானது மட்டுமின்றி பல்வேறு விதமான தகவல்களை நமக்கு வழங்கும். அனால், இந்த சாட்ஜிபிடி சரியாக நாம் எதை தேடுகிறோமோ அது குறித்து, தானாக செயற்கை நுண்ணறிவு மூலமாக ஆராய்ந்து தேவையான மற்றும் துல்லியமான தகவல்களை மட்டும் கொடுக்கும். அதோடு, உதாரணத்திற்கு கட்டுரை, மின்னஞ்சல் மற்றும் கதை என எதை கேட்டாலும், எழுதி கொடுக்கும் திறனையும் சாட்ஜிபிடி கொண்டுள்ளது
பயனாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை:
இதன் காரணமாக தான் அறிமுகமான வெறும் இரண்டே மாதங்களில் இந்த தொழில்நுட்பத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. முன்னதாக உலகிலேயே அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியான பேஸ்புக், இந்த பயனாளர்களின் எண்ணிக்கையை எட்ட 4 ஆண்டுகள் ஆனது. ஸ்நாப் சாட் மற்றும் மைஸ்பேஸ் ஆகிய செயலிகளுக்கு 3 ஆண்டுகளும், வாட்ஸ்-அப் செயலிக்கு இரண்டு ஆண்டுகளும், கூகுளுக்கு ஓராண்டும் ஆனது. ஆனால், அந்த சாதனைகளை எல்லாம் சாட்ஜிபிடி தவிடு பொடியாக்கியது. இதன் வளர்ச்சி தேடுபொறியில் உலகளவில் முதலிடம் வகிக்கும் கூகுள் நிறுவனத்திற்கு பாதகமாகவே கருதப்பட்டது. இதனால், கூகுள் பயனாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.
கூகுள் வெளியிட்ட அறிவிப்பு:
இந்நிலையில், சாட்ஜிபிடி தொழில்நுட்பத்திற்கு நேரடியாக சவால் விடும் வகையில், ”கூகுள் நிறுவனம் ”பார்ட்”(Google Bard) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடுத்த சில வாரங்களில் அறிமுகப்படுத்த உள்ளது” என, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். தொடர்ந்து, “கூகுள் நிறுவனம் லாம்டா (LaMDA) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களை அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில் அடுத்தடுத்து வெளியிடும். நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலமான புதிய கண்டுபிடிப்புகளை 9 வயது குழந்தைக்கு விளக்கவும், கால்பந்தில் இப்போதே சிறந்த ஸ்ட்ரைக்கர்களைப் பற்றி அறியவும், பின்னர் பயிற்சிகளைப் பெறவும் உதவுவதோடு, பார்ட் தொழில்நுட்பம் படைப்பாற்றலுக்கான திறந்த வெளி களமாகவும், உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், ஆர்வத்திற்கான ஏவுதளமாகவும் இருக்கும்" என்று சுந்தர் பிச்சை விளக்கினார்.
தற்போது நம்பத்தகுந்த சில டெஸ்டர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியில் ”பார்ட்” தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த தொழில்நுட்பம் கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது. இதன் மூலம் தேடுபொறி தளத்தில் தனக்கான இடத்தை கூகுள் நிச்சயம் தக்க வைத்துக் கொள்ளும், என துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.