YouTube Vanced: ப்ரீமியமும் இல்லை.. விளம்பரமே இல்லாமல் யூடியூப்..! மிரட்டிய கூகுளால் கடையை மூடிய ஆப்!!
ப்ரீமியம் அக்கவுண்ட் இல்லாமலேயே விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க இந்த ஆப் உதவியது.
யூடியூப் பிரியர்களுக்கு பிடித்த செயலியான Youtube Vanced தன்னுடைய சேவையை திடீரென நிறுத்தியுள்ளது. சட்ட ரீதியாக கூகுள் கொடுத்த எச்சரிக்கையை அடுத்து தன்னுடைய பயணத்தை நிறுத்திக்கொண்டுள்ளது Youtube Vanced.
யூடியூப்..
வீடியோ செயலிகளில் முதன்மையானது யூடியூப். எந்த வீடியோவாக இருந்தாலும் யூடியூப்பில் சென்று தேடுவதுதான் முதல்வேலை. யார் வேண்டுமென்றாலும் தனிக் கணக்கு தொடர்ந்து யூடியூப்பில் வீடியோ பதிவேற்றலாம். அதனை மற்றவர்கள் பார்க்கும் பட்சத்தில் பார்க்கும் நபர்களுக்கு ஏற்ப ஒரு தொகை கொடுக்கப்படும். இதற்காக பலரும் பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் சில விதிமுறைகள் உண்டு.
யூடியூப் நிறுவனம் Community Guidelines என்ற பெயரில் சமூக வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் யூடியூப் தளத்தில் பதிவிடப்படும் வீடியோ, கமெண்ட், லைக்ஸ், முகப்புப் படம் முதலான அனைத்திற்கும் பொருந்தும். மேலும், இவை யூடியூப் தளத்தில் எந்த வகையான படைப்புகள் இடம்பெறக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை யூடியூப் நிறுவனம் மனிதர்கள், செயற்கைத் தொழில்நுட்பம் ஆகிய இரு தரப்பின் மூலமாகவும் அமல்படுத்துகிறது. மேலும், இந்த நெறிமுறைகள் ஒரு சேனல் உரிமையாளரின் பின்னணி, அரசியல் நிலைப்பாடு, அதிகாரம் முதலான எந்த அடிப்படையிலும் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் பொதுவாக அமல்படுத்தப்பட்டிருப்பதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் மோசடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் யூடியூப் சேனல் நீக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
விளம்பரங்கள்..
வீடியோ நடுவே ஓடும் விளம்பரங்களை வைத்து யூடியூப் காசு பார்க்கிறது. உங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லையென்றாலும் அதற்காகவும் தனி ப்ரீமியம் பேக்கேஜ் முறையை கூகுள் வைத்துள்ளது. இப்படி ஒரு திட்டமிடலாக சென்றுகொண்டிருந்தாலும் சில ஆப்கள் யூடியூப்க்கு எதிராக செயல்பட்டு வந்தன. அப்படியான ஒரு செயலிதான் Youtube Vanced.
ப்ரீமியம் அக்கவுண்ட் இல்லாமலேயே விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க இந்த ஆப் உதவியது. ஆனால் இந்த செயலியால் யூடியூப்பின் வருமானவே அடிவாங்கும் என்பதால் சட்டரீதியாக எச்சரிக்கை விடுத்தது கூகுள். அந்த எச்சரிக்கைக்கு Youtube Vanced பணிந்துள்ளது.
Youtube Vancedன் விளக்கம்..
இது குறித்து ட்வீட் செய்துள்ள Youtube Vanced, 'நாங்கள் சேவையை நிறுத்திக் கொள்கிறோம். இனி எங்கள் செயலியை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கிடைக்காது. நீங்கள் கேட்க விரும்பாத ஒரு தகவல்தான் இது. ஆனால் நாங்கள் செய்ய வேண்டிய தேவை. இத்தனை வருடங்கள் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்று எனக் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் தகவலின்படி ஏற்கெனவே டவுன்லோட் செய்திருக்கும் பயனர்கள் தொடர்ந்து இந்த ஆப்பை பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது. ஆனால் விரைவில் அதுவும் தடைபடவும் வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்