Invertor AC functions | சாதாரண ஏசிக்கும், இன்வெட்டர் ஏசிக்கும் என்ன வித்தியாசம்? எது நல்லது?
கரண்ட் பில்லை மிச்சப்படுத்துமா இன்வெட்டர் ஏசி? அது எப்படி கரண்ட் பில்லை மிச்சப்படுத்தும்?
கோடை வெயில் கொளுத்துகிறது. அசந்து போய் டிவி முன்னால் அமர்ந்தால் வரும் விளம்பரங்கள் எல்லாம் ஏசி விளம்பரங்கள் தான். மக்களின் ஆசையை தூண்டி கடையை நோக்கி இழுத்துச்செல்கின்றனர் ஏசி நிறுவனங்கள். அதுவும் வரும் விளம்பரங்கள் சொல்வது என்னவென்றால்.. கரண்ட் பில்லை மிச்சப்படுத்தும். இன்வெட்டர் ஏசி வாங்குங்க.. அது என்ன இன்வெட்டர் ஏசி? அது எப்படி கரண்ட் பில்லை மிச்சப்படுத்தும்?
ஏசியின் வேலை என்னவென்றால் காற்றை குளுமையாக்கி நமக்கு தருகிறது. இதற்காக ஏசியில் இதயமாக வேலை செய்வது கம்ப்ரெசர் மோட்டார்தான். ஏசியை ஆன் செய்தவுடன் இந்த கம்ப்ரெசர் மோட்டார் இயங்கத்தொடங்கி ஓடத்தொடங்கும் முன்பெல்லாம் இந்த மோட்டார் அதிவேகமாக இயங்கிக் கொண்டே இருக்கும். திடீரென ஆஃப் ஆகி மீண்டும் ஓடத்தொடங்கும். அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப அது மீண்டும் மீண்டும் ரீஸ்டார்ட் ஆகிக்கொண்டே இருக்கும். இந்த முறையால் மோட்டார் ஒவ்வொரு முறையும் மின்சாரத்தை கவ்வி இழுக்கும். அதன்பலன் தான் மின்சாரக் கட்டணம் சர்ரென உயர்வது.
இந்த கம்ப்ரெசர் மோட்டாரை கட்டுப்படுத்துவதன் மூலம் மின்சாரக்கட்டணத்தை குறைக்கலாம் தானே..? அந்த வேலையைத் தான் செய்கிறது இன்வெட்டர் ஏசி. இன்வெட்டர் ஏசியில் கம்ப்ரெசர் மோட்டார் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது, வெப்பநிலைக்கு ஏற்ப மோட்டாரின் வேகத்தை கூட்டவும், குறைக்கவும் செய்கிறது. ஒரேயடியாக வேகமாக சுற்றாமல் வெப்பநிலைக்கு ஏற்ப வேகத்தைகட்டுப்படுத்துவதால் மோட்டார் ரீஸ்டார்ட் என்பது இருக்காது. இதனால் மின்சாரத்தையும் அதிகளவில் இழுக்காது. அடிக்கடி ரீஸ்டார்ட் ஆகாது என்பதால் சத்தமும் இருக்காது. மோட்டார் கட்டுப்பாட்டுடன் இயங்குவதால் வழக்கமான ஏசியை விட இன்வெட்டர் ஏசியின் ஆயுள்காலம் அதிகம் தான். சாதாரண ஏசியை விட இன்வெட்டர் ஏசி விலை அதிகம் என்றாலும், மின்சாரக் கட்டணம் மற்ற பயன்களை கணக்கிட்டால் இன்வெட்டர் ஏசி வாங்குவதே நல்லது.