எந்திரன் படத்தில் வரும் காட்சிகள் உண்மையாக நடக்குமா? AI குறித்து எச்சரிக்கும் கூகுள் அதிகாரி..
கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரி செயற்கை நுண்ணறிவு தீர்வு இல்லை எனவும், மனித குலத்திற்கே அது ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் நன்மைகளை மனிதர்களாகிய நாம் மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு முதலான தொழில்துறைகளை அனுபவித்து வருகிறோம். எனினும் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரி செயற்கை நுண்ணறிவு தீர்வு இல்லை எனவும், மனித குலத்திற்கே அது ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் நடத்தி வரும் கூகுள் எக்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைமை வர்த்தக அதிகாரி மோ காவ்டாட் சமீபத்தில் `தி டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் தற்போதைய செயற்கை நுண்ணறிவு மீதான ஆய்வுகள் அதனைக் கடவுளுக்கு நிகரான ஆற்றல் கொண்டதாக மாற்றும் தன்மையுடையவையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் திறனால் உருவாக்கப்படும் ரோபோட்களின் வளர்ச்சி என்பது இதனால் உருவாவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. கூகுள் எக்ஸ் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டுப் பொறியியலாளர்கள் உருவாக்கிய ரோபாட் கைகளால் சிறிய பந்து ஒன்றைக் கண்டுபிடித்து, கையில் தூக்கும் திறனுள்ளதாக உருவாக்கப்பட்டிருப்பதைக் கண்டு, செயற்கை நுண்ணறிவுத் திறனின் முழு ஆற்றலையும் உணர்ந்ததாக மோ காவ்டாட் தெரிவித்துள்ளார்.
ஆய்வு செய்த ரோபாட் கைகளுள் ஒன்று மட்டும் பந்தை எடுக்கவில்லை எனவும், அது வேண்டுமென்றே கட்டளையை மீறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். `நான் ராஜா’ என்ற நினைப்பில் அந்த ரோபாட் அவ்வாறு செய்ததாகக் கூறும் மோ காவ்டாட், அந்த ரோபாட்டின் நடவடிக்கைகள் அச்சத்தை அளித்ததாகவும் கூறியுள்ளார்.
மனிதர்களை விட உயர்ந்தவையாக செயற்கை நுண்ணறிவுப் படைப்புகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என்ற போதும், அவை இன்றே நிகழ்ந்துவிடப் போவதில்லை. இன்றே நிகழ்ந்தாலும், அவை அவற்றை உருவாக்கியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இல்லை. `எந்திரன்’ முதலான சைன்ஸ் ஃபிக்ஷன் படங்களில் வருவதைப் போல, அவை கொலை செய்யும் மெஷின்களாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தவறான கைகளில் இருப்பதால், அவை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பல்வேறு நாடுகள் மக்களைக் கண்காணிக்க facial recognition முதலான முகத்தை வைத்து அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன; அதன்மூலம் மக்களின் பேச்சு சுதந்திரத்திற்குத் தடை விதிப்பது, கடுமையான சட்டங்களை அமல்படுத்துவது முதலான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. சீனா ஹாங் காங் நாட்டை வலுக்கட்டாயமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தததும் இவ்வாறுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் ரோபாட்கள் இவ்வாறான மோசமான குணாதிசயம்களை மனிதர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு ரோபாட்கள் நிறவெறி நிறைந்தவையாக இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் திறன்களைக் கண்காணித்து, அவற்றின் பிரச்னைகளையும் சரிசெய்ய முடியும் என்ற போதும், அவற்றின் வளர்ச்சியையும் உலகத்தை அவை கட்டுப்படுத்தும் என்ற அச்சத்திற்கான பதிலையும் காலம் மட்டுமே தெளிவுப்படுத்தும்.