ELON MUSK: டிவிட்டரில் உங்களின் ஃபாலோவர்ஸ் குறையலாம் - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு - காரணம் இதுதான்!
பயனாளர்களின் டிவிட்டர் கணக்கின் ஃபாலோவர்ஸ் இனி குறைய வாய்ப்புள்ளதாக, அந்நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது முதலே, ட்விட்டர் சமூகம் ஒரே குழப்பத்தில் தான் உள்ளது. ஆரம்பத்தில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்க முழு ஆர்வம் காட்டிய எலான் மஸ்க், பின்பு அதில் உள்ள போலிக் கணக்குகள் தொடர்பான முழு விவரங்களை தன்னிடம் சமர்பிக்கவில்லை என கூறி, டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதன் காரணமாக எலான் மஸ்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைதொடர்ந்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றினார்.
டிவிட்டரில் தொடரும் சர்ச்சைகள்:
அன்று தொடங்கி தற்போது வரை எலான் மஸ்க், எப்போது எந்த குண்டை தூக்கி போடுவார் என்ற பரபரப்பிலேயே ட்விட்டர் பயனர்கள் உள்ளனர். வெரிஃபைடு டிக் வாங்க மாதாமாதம் 8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து பல விவாதங்களை கிளப்பி வரும் நிலையில் இன்னமும் தெளிவான விளக்கம் எதுவும் யாருக்குமே கிடைக்க வில்லை. அப்படியே ஏதாவது ஒரு அப்டேட்டை அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தங்கள் வட்டாரங்கள் மூலம் அறிந்து செய்தி வெளியிட்டால் அதில் சென்று "அப்படியா?" என்று கேட்டு குட்டையை குழப்பி விடுகிறார் எலான் மஸ்க். அதனால் ட்விட்டரில் இது குறித்த விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. டிவிட்டர் நிறுவனத்தின் 50% ஊழியர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாலும், எலான் மஸ்கிற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன.
இதனிடையே, தரவுகள் சரிபார்க்கப்பட்டு பயனாளர்களின் கணக்கிற்கு ப்ளூ டிக் வழங்கும் முடிவும் பெரும் சர்ச்சையானது. அதைதொடர்ந்து, நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும் தனிநபர்களுக்கு நீல நிற டிக் என, மூன்று விதமான டிக்குகளுடன் அமல்படுத்தப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார்.
டிவிட்டரில் 420 வார்த்தைகளை எழுதலாம்?:
டிவிட்டரில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் எலான் மஸ்க், பொதுமக்களின் பல கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, அவர்களின் பரிந்துரைகள் நன்றாக இருந்தால் அவற்றை டிவிட்டர் செயலியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கிறார். அந்த வகையில், ட்விட்டர் பயனர் ஒருவர் ட்விட்டர் 2.0 எழுத்து வரம்பை 280க்கு பதிலாக 420 ஆக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்கு மஸ்க், "நல்ல யோசனை" என்று பதிலளித்தார்.
Twitter is purging a lot of spam/scam accounts right now, so you may see your follower count drop
— Elon Musk (@elonmusk) December 1, 2022
இனி ஃபாலோவர்ஸ் குறையலாம்:
இந்நிலையில், டிவிட்டர் பயனாளர்கள் யாரேனும் தங்களது ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைவதை உணர்ந்தால் கவலைப்பட வேண்டாம். இதற்கு காரணமும் எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் நிறுவனம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை தான். இதுதொடார்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ட்விட்டர் இப்போது நிறைய ஸ்பேம்/ஸ்கேம் கணக்குகளை நீக்குகிறது, எனவே உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைவதை நீங்கள் காணலாம் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் போலி கணக்குகள் நீக்கப்படுவதால் தவறான தகவல்கள் பரப்பப்படுவது தடுக்கப்பட்டு, சுதந்திரமான பேச்சுக்கான தளமாக டிவிட்டர் நிறுவனம் உருவெடுக்கும் என கூறப்படுகிறது.