Twitter x Update: ஒரு எண்டே இல்லையா! வரப்போகும் புதிய சந்தா முறை..எலான் மஸ்கின் அடுத்த அதிரடி!
ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் இரண்டு புதிய சந்தா முறைகள் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Twitter x Update: ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் இரண்டு புதிய சந்தா முறைகள் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து, காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பலவற்றை குவித்து தள்ளினார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன. அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது.
பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன்படி மாதந்தோறும் ரூ.566 இந்தியாவில் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வரப்போகும் புதிய மாற்றம்:
இந்நிலையில், ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் இரண்டு புதிய சந்தா முறைகள் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இரண்டு புதிய சந்தா முறைகளில் ஒன்று குறைந்த விலையிலும், மற்றொன்று அதிக விலையிலும் கிடைக்கும் என்று தெரிகிறது. இவற்றின் குறைந்த விலை திட்டத்தில் விளம்பரங்கள் எதுவும் குறைக்கப்படாது என்றும், விலை உயர்ந்த சந்தாவில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ட்விட்டர் தளத்தில் சந்தா முறைகள் பேசிக், ஸ்டாண்டர்டு, பிளஸ் என மூன்று நிலைகளில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி விளம்பரம் இல்லாத சந்தா தொகை (Desktop) மாதத்திற்கு ரு.650 வசூலிக்கப்படுகிறது. அதேபோல வருடத்திற்கு ரூ.6,800 வசூலிக்கப்படுகிறது. மேலும், விளம்பர இல்லாத ட்விட்டரை செல்போனில் பார்க்க மாதத்திற்கு ரூ.900 மற்றும் வருடத்திற்கு ரூ.9,400 வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ட்விட்டரில் கொண்டு வர உள்ள இரண்டு சந்தா முறைகள் தற்போது வசூலிக்கப்படுவதை விட குறைவாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை அனைத்து பயனர்களும் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சந்தா கட்டணம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் வந்த அறிவிப்பு
சமீபத்திய அறிவிப்பின்படி, ட்விட்டரை பயன்படுத்தவே கட்டணம் செலுத்த வேண்டியதை அவசியமாக்கியிருக்கிறார். சந்தா கட்டணம் செலுத்தினால் தான் கருத்து பதிவிடவோ, கமெண்ட் போடவோ முடியும். இதற்கு ஆண்டுக்கு ஒரு டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி ட்விட்டர் கணக்குகளை தடுக்கவும், போலியானவர்கள் ட்வீட் மற்றும் கமெண்ட் போடுவதை தடுக்கவும் இந்த மாற்றத்தை எலான் மஸ்க் கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க். ஆனால், இந்த புதிய மாற்றம் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகவில்லை.