டாப்ளரை களமிறக்கும் மத்திய அரசு: ”மேம்படும் வானிலை முன்னறிவிப்பு” - மத்திய அமைச்சர்
Doppler Radar Station: வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை மேம்படுத்த 2026-ம் ஆண்டுக்குள், மேலும் 87 டாப்ளர் மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டி.டபிள்யூ.ஆர் என அழைக்கப்படும் டாப்ளர் வானிலை ரேடார்கள் நெட்வொர்க்கானது, இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையைக் கண்காணிக்கவும், 3 மணி நேரம் வரையிலான சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டி.டபிள்யூ.ஆர்களின் தகுந்த முன்னெச்சரிக்கைகள் வழங்க உதவுகின்றன.
2026ல் டாப்ளர் ரேடர்கள்:
தற்போது, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 39 டாப்ளர் வானிலை ரேடார்கள் (டி.டபிள்யூ.ஆர்) நிறுவப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டுக்குள் மேலும் 87 மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இதையடுத்து, டாப்ளர்களின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதன் மூலம், வானிலை முன்னறிவிப்பு தொடர்பான துல்லியத்தை மேலும் மேம்படுத்த உதவும் என கூறப்படுகிறது.
லா நினோ:
மேலும்,வானிலை தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், “ மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் குறிப்பிடத்தக்க குளிரான கடல் மேற்பரப்பு வெப்பநிலையால் குற்ப்பிடப்படும், பருவநிலை நிகழ்வான லா நினா, இந்திய பருவமழையில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக, லா நினா நிகழ்வின் போது, தென்மேற்கு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் இயல்பான மழை முதல் அதிக மழை பெய்யும்.
மேலும், லா நினா ஆண்டுகளில் குளிர்காலத்தில் பொதுவாக இயல்பை விட குறைவான வெப்பநிலை காணப்படுகிறது. லா நினாவின் போது அதிகப்படியான மழைப்பொழிவு வெள்ளம், பயிர் சேதம் மற்றும் கால்நடை இழப்புக்கு வழிவகுக்கும் என்றாலும், இது மானாவாரி விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்திற்கும் பயனளிக்கும்.லா நினாவுடன் தொடர்புடைய அதிகரித்த மழைப்பொழிவு சில நேரங்களில் இந்திய பிராந்தியத்தில் குறைந்த வெப்பநிலைக்கு வழிவகுக்கும், இது சில காரீப் பயிர்களின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை பாதிக்கலாம்.
வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள்:
இந்நிலையில், லா நினா காலம் உட்பட நாட்டில் பருவமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகள் குறித்து அமைச்சகம் வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. உலகளவில், குறிப்பாக பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாற்றங்களை இந்திய வானிலை ஆய்வுத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை பருவநிலை மாதிரியைப் பயன்படுத்தி முன்னறிவிப்புகளைத் தயாரிக்கிறது. கனமழை அல்லது வறட்சி போன்ற லா நினாவுடன் தொடர்புடைய தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு விவசாயிகள் தயாராக உதவுவதற்காக இந்திய வானிலை ஆய்வுத்துறை வேளாண்மை சார்ந்த ஆலோசனைகளை வெளியிடுகிறது. இந்த ஆலோசனைகளில் பயிர்த் தேர்வு, நீர்ப்பாசன நடைமுறைகள் மற்றும் வெள்ளத் தயார்நிலை குறித்தவை இருக்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.