'Diwali gift': 'தீபாவளி பரிசு' - மெசேஜ் வந்தால் உஷார்: மத்திய அரசு எச்சரிக்கை
'தீபாவளி பரிசு' ('Diwali gift') என உங்கள் ஸ்மார்ட்போனுக்கு மெசேஜ் வந்தால் உஷாராக இருக்க வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'தீபாவளி பரிசு' ('Diwali gift') என உங்கள் ஸ்மார்ட்போனுக்கு மெசேஜ் வந்தால் உஷாராக இருக்க வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பல்வேறு பணிகள் டிஜிட்டலை நம்பி உள்ளது. அரசுத் துறைகள் கூட டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை அனைத்து காகித பயன்பாட்டை பெரிதும் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. தற்போது ஆன்லைன் வாயிலாக மிகவும் எளிதாக இந்தச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வங்கிச் சேவைகளும் இதில் விதிவிலக்கல்ல. எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து இன்னொருவர் வங்கிக் கணக்கிற்கு இன்றைய காலகட்டத்தில் அனுப்ப முடியும்.
இதற்காக பிரத்யேக செயலிகளையும் பல முன்னணி நிறுவனங்கள் உருவாக்கி இருக்கிறது. அவற்றை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறாக தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக நாளுக்கு நாள் வசதிகள் பெருகி வருகிறது. மக்களும் அனைத்து சேவைகளையும் எளிதாக டிஜிட்டல் முறையில் பெற முடிகிறது. டிஜிட்டல் மூலம் நேர்மறையான விஷயங்கள் அதிகம் நடந்தாலும், தொழில்நுட்பத்தை கைவிரல் நுனியில் வைத்திருக்கும் ஹேக்கர்கள் நமது ஸ்மார்ட்போன் மற்றும் கம்யூட்டர்களை ஹேக் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.
ஸ்மார்ட்போன்களையும், கம்யூட்டர்களையும் முடக்கி அவர்களின் சாதனங்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். இதன்மூலம் கடவுச்சொற்களைத் திருடி வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நூதன முறையில் திருடும் கும்பல்கள் உள்ளன. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இதுபோன்ற கும்பல் நூதன முறையில் திருட சில வழிகளை கையாண்டு வருகின்றன.
சந்தேகிக்கும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்
தீபாவளி பரிசுகள் பெற இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் என்று உங்களுக்கு மெசேஜ் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MEITY) கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதில், "இந்த மெசேஜ் வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற எந்தவொரு சமூக வலைதளங்களிலும் உங்களுக்கு மோசடி கும்பல் அனுப்பி வைக்கும். சில முன்னணி நிறுவனங்களின் பெயர்களை தாங்கியும் இதுபோன்ற மோசடி லிங்க்குகள் வரக்கூடும் என்பதால் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தனிநபர் தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொல்கள், ஒரு முறை கடவுச்சொல் போன்றவைகளை கேட்டால் கட்டாயம் பகிர வேண்டாம்" என்று தெரிவித்துள்ளது.
பயனர்களுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
1. நம்பத்தகாத இணையதளங்களில் பிரவுஸ் செய்ய வேண்டாம் அல்லது நம்பத்தகாத இணைப்புகளைக் கிளிக் செய்து, சந்தேகத்துக்கிடமான மின்னஞ்சல்கள் அல்லது செய்திகளில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யும் போது எச்சரிக்கையுடன் செயல்படவும்.
2. இணையதளத்தின் டொமைனைத் தெளிவாகக் குறிக்கும் URLகளை மட்டும் கிளிக் செய்யவும். சந்தேகம் இருந்தால், அவர்கள் பார்வையிட்ட இணையதளங்கள் முறையானதா என்பதைச் சரிபார்க்க, தேடுபொறிகளைப் பயன்படுத்தி நேரடியாக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தேடவும்.
3. சட்டப்பூர்வமான நிறுவனங்கள் மின்னஞ்சல்கள் அல்லது எஸ்எம்எஸ்கள் மூலம் உள்நுழைவு சான்றுகள் அல்லது கிரெடிட் கார்டு விவரங்களை ஒருபோதும் கேட்காது. அப்படியொரு செய்தியை நீங்கள் பெற்றால், நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
4. உங்கள் தனிப்பட்ட தகவலை தனிப்பட்டதாக வைத்திருங்கள். கடவுச்சொற்கள் வலுவாக இருப்பதையும் தனிப்பட்ட தகவல்கள் யாருடனும் பகிரப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5. சரிபார்க்கப்பட்ட ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
6. மொபைல் எண் போன்று இல்லாமல் வேறு எண்களைக் கொண்டிருந்தாலும் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.