E-Textile Technology :இனி உங்கள் ஆடைகளே மொபைலை சார்ஜ் செய்யும் ! விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
இவ்வகை துணியில் சூரிய மின்கலங்களை விஞ்ஞானிகள் பொருத்தியுள்ளனர்.இதற்காக 1,200 சிறிய ஒளிமின்னழுத்த செல்களை (சோலார் பேனல்கள்) விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர்
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சில நேரங்களில் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும். பல வியத்தகு தொழில்நுட்பங்கள் சோதனை முயற்சியின் இறுதியில் உள்ளன. அதுவும் நடைமுறைக்கு வந்தால் சயின்ஸ் ஃபிக்ஸன் படங்களில் பார்க்கும் அனைத்தையும் நிஜ உலகிலும் பார்க்க முடியும் . அந்த காலமும் வெகு தொலைவில் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத ஒரு நாளை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? தூங்கும் பொழுதும் கூட சிலர் ஸ்மார்ட்போனை விடுவதில்லை. அந்த அளவிற்கு ஒன்றிப்போய்விட்டது. ஸ்மார்ட்போன்களில் சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவது என்பது நாம் அறிந்ததே. வெளியில் செல்லும் பொழுது ஏதேனும் அவசரத்திற்கு யாரையாவது அழைக்க வேண்டுமென்றால் அப்போது பார்த்து மொபைலில் சார்ஜ் இருக்காது ! இந்த சூழலை பலர் சந்தித்திருப்பீர்கள். அப்படியான நேரங்களில் கைக்கொடுப்பதற்காகத்தான் களமிறங்குகிறது E-Textile Technology.
அது என்ன E-Textile Technology என கேட்கிறீர்கள்தானே ! E-Textile தொழில்நுட்பம் மூலம் நீங்கள் அணிந்து செல்லும் ஆடைகள் மூலமாகவே உங்கள் மொபைலுக்கு நீங்கள் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும். இவ்வகை ஆடைகள் வழக்கமான காட்டன் , சில்க் உள்ளிட்ட துணிகளில் இருந்து மாறுபடுகின்றன. இந்த சிறப்பு வகை E-Textile துணியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆடைகள் சூரிய சக்தியை அவற்றில் சேமித்து சேமிக்கின்றன. மேலும் நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதைப் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம். இந்த துணியால் செய்யப்பட்ட பெரிய சிறப்பு ஆடைகளை பயன்படுத்தினால் , ஆடை அதிக சூரிய சக்தியை தன்னுள் சேமித்து வைக்கும், மேலும் உங்கள் ஸ்மார்ட்போனை அடிக்கடி சார்ஜ் செய்ய முடியும்.
இந்த வகை துணியை E-Textile Technology பயன்படுத்தி நாட்டிங்ஹாம் ட்ரென்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வகை துணியில் சூரிய மின்கலங்களை விஞ்ஞானிகள் பொருத்தியுள்ளனர். இதற்காக 1,200 சிறிய ஒளிமின்னழுத்த செல்களை (சோலார் பேனல்கள்) விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர் .இந்த பிரத்யேக துணி சூரிய ஆற்றலைச் சேமித்து வைக்கிறது .இதைப் பயன்படுத்தி உங்கள் கேஜெட்களை சார்ஜ் செய்யலாம். இந்த துணி 400 மில்லிவாட் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டது, எனவே உங்கள் கேஜெட்களை எளிதாக சார்ஜ் செய்ய முடியும். ஸ்மார்ட் போன் மட்டுமல்ல , ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இயர்பட்கள் ஆகியவற்றையும் இந்த பிரத்யேக ஆடை மூலம் நீங்கள் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும்! சூரிய ஒளி மூலம் இயங்கக்கூடியது என்பதால் மழைக்காலங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்காது! இருந்தாலும் இது ஒரு cool ஆன கண்டுபிடிப்புதானே !