நெருங்கும் ஆபத்து... Chrome OS, Mozilla Firefox பயனாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மத்திய அரசு!
கூகுளின் குரோம் ஓஎஸ் அல்லது மொஸில்லா பயர்பாக்ஸைப் பயன்படுத்துபவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
கூகுளின் குரோம் ஓஎஸ் அல்லது மொஸில்லா பயர்பாக்ஸைப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
என்னதான் புது, புது டெக்னாலஜிகள் வந்தாலும் உலகளவில் சைபர் வழி தாக்குதல், மோசடிகள் என்பது தொடர்கதையாகி வருகிறது. இதனைத் தடுக்க என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனிடையே கடந்த 2004 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் திருத்தச் சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையால் CERT-In எனப்படும் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு தொடங்கப்பட்டது.
இந்த குழு இணையத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை வெளியிடும். அந்த வகையில் கூகுளின் குரோம் ஓஎஸ் அல்லது மொஸில்லா பயர்பாக்ஸைப் பயன்படுத்துபவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்குறிப்பிட்ட மென்பொருளில் சில குறைபாடுகள் உள்ளதாகவும், இதனால் அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஹேக்கர்கள் பயனாளர்களின் தரவுகளை எளிதில் அணுகி அவற்றை கைப்பற்றி சைபர் தாக்குதல்களை நடத்தலாம் என கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து கூகுள் அதன் குரோம் ஓஎஸ்ஸில் உள்ள பாதிப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பயனாளர்கள் தங்கல் குரோம் ஓஎஸ் மென்பொருளை சமீபத்திய அப்டேட்டுக்கு ஏற்றவாறு புதுப்பித்து கொள்ளுமாறும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல் மொஸில்லா பயர்பாக்ஸ் நிறுவனமும் இந்த பாதுகாப்பு குறைபாடுகள் Firefox 101 க்கு முந்தைய Firefox iOS பதிப்புகளில் உள்ளது. எனவே Mozilla Firefox iOS பயனாளர்கள் ஹேக்கிங் முயற்சிகளில் இருந்து பாதுகாக்க தற்போதைய அப்டேட்டுக்கு மாறி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவாதத்தின் போது 14 லட்சத்துக்கும் அதிகமான இணைய தாக்குதல்களை கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு முன்கூட்டியே கணித்ததாக தெரிவித்திருந்தது. அதேபோல் ஆண்டுதோறும் 27% இந்திய நிறுவனங்கள் இணைய தகவல்களை திருடும் குற்றவாளிகளுக்கு மீட்பு தொகையாக சராசரியாக 5 லட்சம் டாலர் வழங்குவதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
நீங்களும் Chrome OS, Mozilla Firefox பயனாளர்கள் என்றால் உங்களுடைய மென்பொருளை அப்டேட் செய்து இணைய தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்