Battleground | பப்ஜி அக்கவுண்ட் டூ பேட்டில்கிரவுண்ட்.. ரெக்க கட்டி பறக்கும் புது கேம்!
பப்ஜியின் ரீமேக்காக களமிறங்கிய BGMI கேம் முழுவதுமாக தற்போது ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் வசதி வந்துள்ளது.
பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வேறு பெயருடன் களம் இறங்கியது பப்ஜி. கடந்த மாதம் பப்ஜியின் இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிய பெயருடன் முன்பதிவை தொடங்கிய Battlegrounds Mobile India கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறங்கியது. ஒருமாதமாக ரிலீஸ் தேதி எப்போது என அறிவிக்கப்படாத நிலையில் புதிய அறிவிப்புகள், பரிசுகள், டீசர்கள் என களைகட்டியது சோஷியல் மீடியா.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பீட்டா வெர்சன் வெளியான சூழலில் தற்போது முழு கேம் ப்ளே ஸ்டோரில் ரிலீஸ் ஆகியுள்ளது. தென்கொரியாவை சேர்ந்த கிராஃப்டர் என்பவர் வடிவமைத்த இந்த கேம் இந்தியாவில் அதிகம் ட்ரெண்டாகும் கேமாக இடம்பிடித்துள்ளது. அத்துடன் வெளியே வந்த ஒரு நாளிலேயே பலர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இதன் முழு கேமை எப்படி பதிவிறக்கம் செய்வது?
கூகுள் ப்ளேஸ்டோரில் இதை பதிவிறக்கம் செய்யலாம். ஏற்கெனவே பீட்டா வெர்சன் வைத்திருக்கும் நபர்கள் தற்போது அப்டேட் செய்து கொள்ளலாம். புதிதாக பதிவிறக்க நினைப்பவர்கள் மற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வது போல் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பப்ஜி கணக்கை இந்த கேமிற்கு மாற்ற முடியுமா?
இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பாக அதில் கணக்கு வைத்துள்ள நபர்கள் Battlegrounds Mobile India(BGMI) கேமிற்கு மாற்று கொள்ள முடியும் வசதி உள்ளது. இதை ஒருவர் தன்னுடைய ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் கணக்கு மூலம் மாற்ற முடியும். இந்த வசதி வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் புதிய கேமை பதிவிறக்கம் செய்துவிட்டு விளையாடிய பின்பு பழைய பப்ஜி கணக்கை மாற்றினால் ஒரு சிக்கல் வரும். அதாவது நீங்கள் புதிதாக விளையாடிய கேமில் இருந்த நிலை மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் ஆகியவை முற்றிலும் அழிந்துவிடும். ஆகவே புதிய கேமில் விளையாட்டை துவங்குவதற்கு முன்பாக பப்ஜி கணக்கை இதற்கு மாற்றுவது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BGMI கேமிற்கு தேவையான ஹார்ட்வேர் என்னென்ன?
BGMI கேமிற்கு ஆன்ட்ராய்டு 5.1 க்கு மேல் உள்ள ஸ்மார்ட் போன் இருந்தால் போதுமானது. அத்துடன் குறைந்தபட்சம் 2 ஜிபி ரேம் இருந்தால் போதும். ஆகவே இந்த கேம் அனைத்து வகையான மொபைல் போனிற்கும் கிட்டத்தட்ட பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2020 செப்டம்பர் மாதம் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டது. பப்ஜி கேம் உடன் டிக்டாக் போன்ற சீன செயலிகளும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பாசிட்டிவா? நெகடிவா? கொரோனா முடிவை 90 நிமிடத்தில் சொல்லும் மாஸ்க்!