(Source: ECI/ABP News/ABP Majha)
Bajaj Qute: ‛தடை அதை உடை’ மீண்டும் களமிறங்கும் பஜாஜ் கியூட்! - Uber உடன் புதிய ஒப்பந்தம் ?
உரிய பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை என கூறி உச்ச நீதிமன்றம் இந்தியாவில், பஜாஜ் கியூட் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ மொபைல் சந்தையில் களமிறங்கி பலரையும் வியக்க வைத்த வாகனம்தான் பஜாஜ் கியூட். (bajaj qute) பார்ப்பதற்கும் க்யூட்டாக ஒரு மினி கார் போல தோற்றமளித்தாலும், இது கார் அல்ல. இது மூன்று சக்கரங்களுடன் இயங்கும் ஆட்டோவுக்கு இணையானதுதான். இதனை குவாட்ரிசைக்கிள்(quadricycle) என அழைக்கின்றனர். இந்தியாவில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட இந்த வாகனமானது தற்போது மீண்டும் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக அந்நிறுவனம் தனது இணைய பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில் கேரளா, குஜராத், மஹாராஸ்டிரா உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் மட்டுமே இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதில் உரிய பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை என கூறி உச்ச நீதிமன்றம் இந்தியாவில் பஜாஜ் கியூட் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதித்தது. இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் உலகின் சில நாடுகளுக்கு குவாட்ரிசைக்கிள் வாகனம் விற்பனை செய்யப்பட்டுதான் வருகிறது. தற்போது மீண்டும் இந்தியாவில் இவ்வகை வாகனம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஆனால் இம்முறை தனிநபர் பயன்பாட்டிற்கு கிடைக்காது என கூறப்படுகிறது. இதனை சில வாகன நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது. அதன் படி அந்த உரிமையை பிரபல ஊபர் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆண்டின் இறுதியில் பஜாஜ் கியூட்டை குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இதன் சோதனை ஓட்டம் பெங்களூருவில் நடைபெறும் என தெரிகிறது.
ஐரோப்பாவில் மட்டும் 3 லட்சம் கார்கள் விற்கப்பட்டதாக அந்நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது கார்களை போல தோற்றமளித்தாலும், காரின் குறைந்த பட்ச வேகத்தை விட இதன் வேகம் குறைவுதான். மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லக்கூடியது. அதிகபட்ச எஞ்சின் வேகம்( maximum engine output) என்பது 8.08 kW ஆகும். ஓட்டுநர் மற்றும் மூன்று நபர்கள் பயணிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முதலில் இப்படியான குவாட்ரிசைக்கிள் வாகனத்தை அறிமுகப்பட்டுத்தியது பஜாஜ் நிறுவனம்தான். தற்போது மகேந்திரா நிறுவனமும் ஆட்டொம்(atom) என்ற குவாட்ரிசைக்கிள் வாகனத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டதே மீண்டும் பஜாஜ் கியூட்டை களமிறக்க காரணம் என கூறப்படுகிறது. இவ்வகை வாகனங்கள் முற்றிலும் நகரங்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.ஆட்டோவில் பயணிக்கும் அனுபவமே இதன் மூலம் கிடைக்கும் . சிகப்பு , பச்சை , மஞ்சள் , ஊதா போன்ற வண்ணங்களில், கிட்டத்தட்ட 3 லட்சம் முதல் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.