Indians and iPhone 13: ஒரு சராசரி இந்தியன் ஐபோன் 13 வாங்க எவ்வளவு நேரம் உழைக்கணும் தெரியுமா? இதைப் படிங்க
நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள், இறக்குமதி வரிகள், நாணயங்களின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஐபோன் விலை ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஒரு சராசரி இந்திய குடிமகன் எவ்வளவு நேரம் உழைத்தால் ஐபோன் 13 வாங்க முடியும் என ஆய்வு நடத்தப்பட்டு, ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
உலகெங்கும் ஐபோன் 13 வெளியாகி பலரது மனங்களையும் கவர்ந்து வருகிறது. ஐபோன் 13 மாடல்களை பொருத்தவரை ஐபோன் 13, ஐபோன்13 புரோ, ஐபோன் 13 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி என நான்கு விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.69,999 ல் இருந்து தொடங்குகிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன் மாடல்களை ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 13ஐ வாங்க முடிந்தவர்கள் அது இந்தியாவில் வந்திறங்கியபோதே அதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் அவ்வளவு பெரிய தொகை கொடுத்து அதனை வாங்க முடியாதவர்கள் வழக்கம்போல “ஐபோன் வாங்க - கிட்னியைத்தான் விக்கனும்” போல போன்ற அதே பழைய ஜோக்குகளை வாட்ஸ் ஆப்பிலும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.
நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள், இறக்குமதி வரிகள், நாணயங்களின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஐபோன் விலை ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ‘மணி சூப்பர் மார்க்கெட்’ எனும் நிறுவனம் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள குடிமக்களின் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அந்நாட்டில் ஐபோன் 13ன் விலை ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஒரு ஆய்வு நடத்தியது. அதன்படி இந்த குறைந்தபட்ச ஊதியத்தோடு எவ்வளவு மணி நேரம் உழைத்தால் 128ஜிபி கொண்ட ஐபோனை வாங்க முடியும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின் படி, ஒரு சராசரி இந்தியன் ஐபோன் வாங்குவதற்கு, 724.2 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். அதாவது சுமார் 30 நாட்கள் வேலை செய்ய வேண்டும். இந்த பட்டியலில் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிலிப்பைன்ஸ் உள்ளது. பிலிப்பைன்ஸைப் பொறுத்தவரை ஐபோனை வாங்க 775.3 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சுவாரசியமாக ஐபோனை உற்பத்தி செய்யும் அமெரிக்கா 3-ஆம் இடத்தில் உள்ளது. அமெரிக்கர்கள் 49.5 மணி நேரம் உழைத்தால் ஐபோனை வாங்கலாம் என தெரிவித்துள்ளது ஆய்வு. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து கடைசி இடத்தில் உள்ளது. நீங்கள் சுவிட்சர்லாந்து நாட்டின் குடிமகனாக இருந்தால் 34.3 மணி நேரம் வேலை செய்தாலே ஐபோன் 13-ஐ சொந்தமாக வாங்கிக்கொள்ள முடியும்.
இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்த நாடுகளில் குறைந்தபட்ச ஊதியம் அதிகம். அதுபோலவே பல்வேறு வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் அங்கு குறைவாக உள்ளதன் காரணமாக ஐபோனின் விலையும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.