Twitter X: ’நீங்க பண்றது சரி இல்ல’ .. எக்ஸ் தளத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதித்த ஆஸ்திரேலிய அரசு.. என்ன காரணம்?
பிரபல சமூக வலைத்தள பக்கமாக எக்ஸ் தளத்தில் பதிவுகளை சரியாக கையாளவில்லை என கூறி ஆஸ்திரேலிய அரசு அபராதம் விதித்துள்ளது.
பிரபல சமூக வலைத்தள பக்கமாக எக்ஸ் தளத்தில் பதிவுகளை சரியாக கையாளவில்லை என கூறி ஆஸ்திரேலிய அரசு அபராதம் விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள சமூக வலைத்தளங்களில் ஒன்று எக்ஸ் தளம். இதற்கு முன்னால் ட்விட்டர் என்றழைக்கப்பட்ட இந்நிறுவனத்தை கடந்தாண்டு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் நீண்ட இழுத்தடிப்புக்கு பின் 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) விலைக்கு வாங்கினார். எந்த நேரத்தில் வாங்கினாரோ, குழந்தை கையில் கிடைத்த விளையாட்டு பொம்மை போல் தினமும் ஒரு பஞ்சாயத்து எக்ஸ் தளத்திற்கு ஏற்படுகிறது.
நிறுவனத்தை வாங்கியவுடன் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் நிறுவனம், அரசு அமைப்புகள், தனிநபர்களுக்கு என தனித்தனியாக அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான குறியீடுகளை வழங்கினார். இதன் பின்னர் சில மாதங்கள் கழித்து ட்விட்டர் நிறுவனத்தின் பெயரையே மாற்றினார். எக்ஸ் என மாற்றம் செய்யப்பட்டது. ட்விட்டரின் லோகோவான நீல குருவி நீக்கப்பட்டு எக்ஸ் என்ற எழுத்து வைக்கப்பட்டது. வலைத்தள பக்கமும் நீல நிறத்தில் இருந்து கருப்பு நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இது இணையவாசிகளிடையே மீம் மெட்டீரியலாகவே மாறிப்போனது. மேலும் எலான் மஸ்க்கும் சும்மா இல்லாமல் எக்ஸ் தளத்தில் அவ்வப்போது ஒரு தலைப்பில் பதிவுகளை வெளியிடுவார். சில நேரங்களில் மற்ற பயனாளர்களின் பதிவுக்கு பதிலளிப்பார்.
நிர்வாக ரீதியாகவும் ஊழியர் பணி நீக்கம் தொடங்கி பல அதிரடி முடிவுகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார். இப்படி தினமும் அவரது பெயர் செய்திகளில் அடிப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் தளத்திற்கு ஆஸ்திரேலிய அரசு அபராதம் விதித்துள்ளது. இந்த தளத்தில் ஆபாச வீடியோக்கள் சகட்டுமேனிக்கு உலா வருவது அனைவரும் அறிந்த விஷயம். ஏற்கனவே ஒவ்வொரு நாட்டு அரசும் இதுபோன்ற ஆபாச வீடியோக்கள் விஷயங்களில் மிக கவனமுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் தான் எக்ஸ் நிறுவனம் சிக்கியுள்ளது. பொதுவாக பாலியல் சுரண்டல் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் தொடர்பான பதிவுகளை பேஸ்புக், யூட்யூப் போன்ற தளங்கள் உடனடியாக நீக்கி விடும். அல்லது அதனை காண்பதற்கு முன் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற செய்யும். ஆனால் எக்ஸ் தளத்தில் இதுபோன்ற பதிவுகளை முறையாக கையாள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பியும் முறையான விளக்கத்தை அந்நிறுவனம் அளிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஆஸ்திரேலிய அரசு அந்நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.3.20 கோடி அபராதம் விதித்துள்ளது.
மேலும் படிக்க: 33 Years of Vikram: கலையுலக பிதாமகன்.. நடிகர் “சீயான்” விக்ரம் சினிமாவில் அறிமுகமாகி 33 ஆண்டுகள் நிறைவு..!