குழந்தைகளையும் டார்கெட் செய்யும் ஓடிடி! நெட்ஃபிளிக்ஸுக்கு போட்டியாக களமிறங்கும் அமேசான்!
Amazon Kids+ ஏற்கனவே குழந்தைகளுக்கு ஏற்ற டிவி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களை வழங்கி வருகிறது.
மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் முதன் முறையாக குழந்தைகளுக்கான மொபைல் கேமிங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமேசான் தனது முதல் ஒரிஜினல் மொபைல் கேம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசானுக்கு சொந்தமான Amazon Kids+ தளத்தில் இந்த விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. அமேசான் கிட்ஸ்+ இல் “சூப்பர் ஸ்பை ரியான்” மற்றும் “டூ, ரீ மற்றும் மி” என்னும் இரண்டு புதிய கேம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதே தளத்தில் வெளியான டிவி நிகழ்ச்சி கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு விளையாட்டுகளுமே மாத சந்தா அடிப்படையில் ஆண்ட்ராய் மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதள மொபைல்களிலும் விளையாடலாம். Amazon Kids+ ஏற்கனவே குழந்தைகளுக்கு ஏற்ற டிவி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் அந்த நிறுவனம் மொபைல் கேமிங்கிலும் களமிறங்கியுள்ளது. மொபைல் கேமிங் சூடிபிடிக்கும் இந்த காலக்கட்டத்தில் அமேசான் போன்ற பெரு நிறுவங்கள் கால் பதிப்பது ஒன்றும் ஆச்சர்யபடுவதற்கில்லை. ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸும் கேமிங் துறையில் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அமேசான் வெளியிட்டுள்ள சூப்பர் ஸ்பை ரியான் மற்றும் டூ, ரீ மற்றும் மி ஆகியவை அமேசான் கிட்ஸ்+ பிளாட்ஃபார்மில் கிடைக்கும் டிவி நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. Do, Re மற்றும் Mi ஆகியவை விரைவில் iOS இல் மட்டுமே கிடைக்கும், சூப்பர் ஸ்பை ரியான் US, UK மற்றும் அயர்லாந்தில் iOS மற்றும் Android ஆகிய இரண்டிற்கும் வெளியிடப்பட்டது. இது தவிர விரைவில் கனடா, ஜெர்மனி மற்றும் ஜப்பானில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டானது குழந்தைகளை மட்டுமல்ல , பெரியவர்களையும் வெகுவாக கவரும் என நம்புவதாக அமேசான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. Do, Re மற்றும் Mi என்பது இசையை மையமாகக் கொண்ட கல்வி கேம் ஆகும், இது குழந்தைகள் இசைக்கருவிகளின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. சூப்பர் ஸ்பை ரியான் தனியாகவும் , குழுவாகவும் இணைந்து விளையாடலாம்.Wi-Fi இல் உள்ள பிளேயர்களை ஒருவருக்கொருவர் விளையாட அனுமதிக்கும் "பார்ட்டி பயன்முறையும்" உள்ளது.
இப்போது Amazon Kids+ பிளாட்ஃபார்மில் உள்ள குழந்தைகளுக்கான டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பிற உள்ளடக்கங்களை அணுக அமேசான் பிரைம் போலவே உங்களுக்கு மாத சந்தா செலுத்த வேண்டியது கட்டாயம். இதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 225 வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், இதனை ஆதரிக்கும் சாதனங்களில் கேம்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து விளையாடலாம். உதாரணமாக Amazon Kids+ சந்தாதாரர்கள் Amazon Fire டேப்லெட்களில் கேம்களை பதிவிறக்கம் செய்து விளையாட முடியும்.