(Source: ECI/ABP News/ABP Majha)
Airtel 5G Plus: சிம் கார்டை மாற்ற தேவையில்லை; போனை மாற்றுங்கள் - 5G சேவையில் ஏர்டெல் ப்ளான் இதுதான்!
Airtel 5G Plus: ஏர்டெல் பயனர்கள் Airtel 5G Plus சேவையை அனுபவிக்க புதிய சிம் கார்டு வாங்க வேண்டுமா வேண்டாமா என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
5G சேவையானது இந்தியாவில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது. அதாவது அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கப்படது. இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5-ஜி சேவையை டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் 5ஜி சேவை நேற்று இருந்து ( 06/10/2022) தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இன்னும் நாடு முழுவதும் கொண்டுவரப்படாத இந்த 5G சேவையானது, நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை, வாரணாசி, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4G சேவையை பயன்படுத்தி வந்த அனைவரும், இனி எப்படி 5G சேவையை பயன்படுத்துவது என பல சந்தேகங்களில் உள்ளனர். குறிப்பாக அதே சிம் கார்டினை பயன்படுத்தலாமா அல்லது புதிய சிம் கார்டு வாங்க வேண்டுமா என்றெல்லாம் பல சந்தேகங்களில் உள்ளனர். இந்த குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் ஏர்டெல் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
5G சேவையை பயன்படுத்த புதிய சிம் கார்டினை வாங்க வேண்டி எந்த அவசியமும் இருக்காது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் சிம் கார்டில் 5G சேவையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5G தொழில்நுட்பம் தொடக்கம் குறித்து ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல், "இந்தியாவின் தொழில்நுட்ப சேவையில் கடந்த 27 ஆண்டுகளாக ஏர்டெலின் பங்களிப்பு முக்கியமானது. நாட்டின் தொலைதொடர்பு புரட்சியில் ஏர்டெலின் பங்களிப்பு அளப்பரியது. இன்று முதல் சிறப்பான புரட்சியில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளோம். ஏர்டெல் வேகமான இணைய வசதியினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் திருப்தி எங்களுக்கு மிகவும் முக்கியம். அதனால், தற்போது ஏர்டெல் 4G சிம் வைத்திருக்கும் பயனர்கள் தங்களது 5G தொலைபேசியில் அந்த சிம் கார்டினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்றார்.
View this post on Instagram
சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை வாங்கியுள்ளது. இதன் மூலம், அதன் ஸ்பெக்ட்ரம் ஹோல்டிங்கை மேம்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரமை வாங்கிய பாரதி ஏர்டெல், இந்தியாவில் 5G புரட்சியை ஏற்படுத்துவதற்கு நல்ல நிலையில் இருப்பதாக கூறியிருந்தது.